மகாராஷ்டிரா ஸ்காலர்ஷிப் ஊழல் : 2000 கோடிக்கு மேல் பணம் சுருட்டல் ?

 

மும்பை

காராஷ்டிரா அரசு பின்தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் கல்விக்கு வழங்கிய உதவித் தொகையை கோடிக்கணக்கில் கல்வி நிறுவனங்கள் கொள்ளை அடித்தது தெரிய வந்துள்ளது.

சமூக நல வாரியம் மற்றும் பழங்குடியினர் முன்னேற்ற வாரியம் மூலமாக மகாராஷ்டிர அரசு கல்வி உதவித் தொகைகள் வழங்கி வருகிறது.  இந்த தொகை, பின் தங்கிய வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் ஆகிய இனங்களில் உள்ள மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப் படுகிறது.  இதில் பல முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை ஒட்டி இதை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அரசு அமைத்தது.

அந்தக் குழு 2010 முதல் வழங்கப்பட்ட தொகைகள் குறித்து 1382 கல்வி நிறுவனங்களின் கணக்கை ஆராய்ந்ததில் மொத்தம் ரூ 2174 கோடிகள் வரை முறைகேடு நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.  மாநிலத்தில் சமூக நல வாரியத்தின் கீழ் 12679 கல்வி நிறுவனங்களும், பழங்குடியினர் முன்னேற்ற வாரியத்தின் கீழ் 11000 கல்வி நிறுவனங்களும் உள்ளன.  இவைகளின் கணக்கை முழுவதுமாக சோதித்தால் இன்னும் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் வெளியே வரும் என சொல்லப்படுகிறது.  குழு சிஐடி பிரிவின் மூலம் முழு விசாரணை நடத்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த கல்வி நிறுவனங்கள் டூப்ளிகேட் சர்டிபிகேட் மூலம் பல மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களில் படிப்பதாக ஆவணங்கள் தயார் செய்துள்ளன.   இதனால் ஒரே மாணவர் பல கல்விக் கூடங்களில் வெவ்வேறு பாடங்கள் பயில்வதை போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் உண்மையில் அந்த மாணவர்கள் யாரும் அங்கு படிக்கவே இல்லை, என்றும் ஆவணங்களில் மட்டுமே அவர்கள் பெயர் காட்டப்பட்டுள்ளது என்பதும் குழு கண்டுபிடித்துள்ளது.  அந்த மாணவர்களின் கல்வித் தொகையை கல்விக் கூடங்களே எடுத்துக் கொண்டுள்ளன.

தற்போது நாடெங்கும் டிஜிட்டல் இந்தியா என பேசப்பட்டு வரும் நிலையில் இந்த கல்வி நிறுவனங்களின் ஆவணங்கள் மற்றும் கணக்குகள் கையால் எழுதப்பட்டு வருகின்றன.  ஒற்றை ரூமில் நடைபெறும் பல கல்வி நிறுவனங்கள் பல பாடங்கள் தங்களிடம் நடப்பதாகவும், ஒவ்வொரு பாடதிட்டத்திலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிப்பதாகவும் ஆவணங்கள் தயாரித்துள்ளன.

அளிக்கப்படும் உதவித் தொகையில் 10% மாணவர்களின் செலவுக்காக அவர்களின் வங்கிக் கணக்கில் போடப்படும்.   மீதமுள்ள 90% கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.  அந்த 10% தொகையிலிருந்து கிட்டத்தட்ட 64 கோடி ரூபாய் அப்படி மாணவர்கள் இல்லை என அரசுக்கு திருப்பி வங்கிகள் அனுப்பியுள்ளன.  ஆனால் மீதமுள்ள 90% தொகையை எந்த கல்வி நிறுவனமும் திருப்பித் தரவில்லை.  இது பற்றி அரசும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குழு இந்த உதவித்தொகை சுரண்டல் பற்றி முழு விசாரணை நடத்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.  அத்துடன் வரும் காலங்களில் இது போன்ற முறைகேடுகளை தவிர்க்க பயோ-மெட்ரிக் முறையில் மாணவர் வருகையை பதிய வேண்டும் எனவும் யோசனை தெரிவித்துள்ளது. அத்துடன் கம்ப்யூட்டர் மூலம் தங்களின் வரவு செலவு கணக்கை பதிய முடியாத கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி உள்ளது.

You may have missed