காரில் பதுக்கிய ரூ.163கோடி, 100கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது எப்படி? வருமான வரித்துறை விளக்கம்

சென்னை:

மிழக நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் வீட்டில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை  நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டில் இதுவரை ரூ.163 கோடி ரூபாய், 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் இதுவரை நடைபெற்ற வருவமான வரி சோதனையில் அதிக அளவிலான ரூபாய் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டது இதுதான் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

காரின் டிக்கியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் மற்றும் தங்கம்

தமிழக முதல்வர் எடப்பாடியின் பினாமி என்று கருதப்படும் அரசு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரரான நாகராஜன் செய்யாதுரையின்  நிறுவனமான எஸ்.பி.கே. நிறுவனம் மற்றும், கோ எக்ஸ்பிரஸ் வே நிறுவனம் உள்பட  அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது.

அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின்போது,செய்யாதுரைக்கு சொந்தமான  ரூ.163 கோடி கணக்கில் வராத  பணம் மற்றும் 100 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

இதுகுறித்து  தெரிவித்துள்ள வருமானவரித்துறையினர், நாட்டிலேயே அதிக அளவிலான பணம் மற்றும் தங்கம் தற்போதுதான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

நாகராஜன் செய்யாதுரை வீட்டில் இருந்து ரூ.24 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டதாகவும், மற்ற பணம் மற்றும் தங்கம் அனைத்தும் உறவினர்களின் வீடுகள் மற்றும்  வாகனங்களில் இருந்து கைப்பற்றப்பட்டது என்று கூறி உள்ளனர்.

இந்த பணம் மற்றும் நகைகள்  10 இடங்களில் இருந்து மீட்கப்பட்டதாகவும்,  மேலும் கணக்கில டங்கா சொத்துக்கள் அதற்கான பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

மற்றெரு காரின் டிக்கியில் அட்டைப்பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் மற்றும் தங்கம்

ஒப்பந்ததாரரான நாகராஜன் செய்யாதுரை, அவரது வீட்டில் கார் ஷெட் வேலை நடைபெற்று வருவதாக கூறி,  அவரது கார்களை அவரது நண்பர்களின் வீடுகள் உள்பட  பல இடங்களில் நிறுத்தி வைத்துள்ளார். அந்த கார்களில் பணம் மற்றும் தங்கத்தை மறைத்து வைத்துள்ளார்.

தங்களுக்கு இதுகுறித்த தகவல் கிடைத்ததைதொடர்ந்து, சேலம் அருகே உள்ள  அரசியல் வாதியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் வீட்டில் இருந்து ஒரு கார் மீட்கப்பட்டது. அந்த காரில் இருந்து ரூ.20 கோடி அளவிலான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு இடத்தில் இருந்த மேலும் ஒரு காரில்  ஏராளமான தங்க பிஸ்கட்டுகள் மற்றும் கட்டுக்கட்டாக பணமும்  பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் மற்றும் தங்கங்கள் அனைத்தும் டிராவல் பேக்கில் வைத்து, காரின் டிக்கில் வைக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்து உள்ளார்.

கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்கத்தை, செய்யாதுரை அவரிடம்  உள்ள பிஎம்டபிள்யூ கார் உள்பட பல காரில் ஏற்றி, அவரது ஊழியர்கள் மூலம் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது என்றும், இதுவரை  கைப்பற்றப்பட்ட பணம்  மற்றும் தங்கம் அனைத்தும்  அவரது ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் 10 பேரிடம் இருந்தே பறிமுதல் செய்துள்ளது.

இவ்வாறு வருமான வரித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இன்று 2 ஆம் நாளாக சென்னையில் மயிலாப்பூர், அண்ணா நகர், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் செய்யாதுரை, அவரது மகன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை தொடர்கிறது.

அரசு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரான நாகராஜன் செய்யாதுரை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பினாமி என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி பதற்றத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் அமித்ஷா வந்துசென்ற பிறகு இந்த சோதனை நடவடிக்கை நடைபெற்று வருவதால், இந்த வருமான வரித்துறை சோதனைக்கு பின்புலமாக பாஜக இருப்பதாகவும், தமிழக அரசையும், ஆட்சியாளர்களையும் மிரட்டவே இதுபோன்ற சோதனைகளை நடத்தி வருவதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்ப்டடு வருகிறது.