மும்பை :
சில தனியார் தொலைக்காட்சிகள், தங்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகரிக்க பணம் கொடுத்து, பார்வையாளர்களை, இழுத்த விவகாரத்தில் தினம் தினம் புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
அப்படி நேற்று வெளியான ஒரு பகீர் தகவல்.
மும்பையில் நிரந்தர வேலை எதுவும் இல்லாமல் இருந்தவர் மிஸ்திரி. அங்குள்ள வர்சோவா பகுதியை சேர்ந்த இவரது வங்கி கணக்கில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

எப்படி?
பொதுமக்கள் எந்த டி.வி.யில், எந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள் என்பதை கணக்கிட மும்பையில் உள்ள சுமார் 2 ஆயிரம் வீடுகளில் ‘பாரோ- மீட்டர்’’ என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தான் டி.வி.யின் டி.ஆர்.பி.ரேட்டிங் கணக்கிடப்படுகிறது.
வர்சோவா பகுதியில் சாமான்ய மக்கள் வசிக்கும் இடங்களில் , பாரோ – மீட்டர் பொருத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு சென்று, குறிப்பிட்ட டி.வி.யை மட்டுமே பார்க்குமாறு மிஸ்டிரி சொல்ல வேண்டும்.
மிஸ்திரி சொல்லியபடி, குறிப்பிட்ட டி.வி.யை மட்டும் பார்க்கும் பார்வையாளர்களுக்கு 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை மாதம் தோறும் இவர் வழங்குவார்.
இந்த ‘’பணிக்காக’’ இவருக்கு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?
10 லட்சம் ரூபாய்.
இந்த பணத்தை கொடுப்பது யார்?
இவர் எந்த டி.வி.யை பார்க்க சொல்கிறாரோ, அந்த டி.வி.யின் நிர்வாகம் , இரு மாதங்களுக்கு ஒரு முறை 20 லட்சம் ரூபாய் பணத்தை டாண்; என மிஸ்திரி வங்கி கணக்கில் செலுத்தி விடும்.
பார்வையாளர்களுக்கு கொடுக்கும் ஐநூறு, எழுநூறு போக மிஸ்திரிக்கு கணிசமான பணம் கிடைக்கும். அப்படி ஒரு ஆண்டில் இவர் வங்கி கணக்கில் சேர்ந்த பணம் தான், இந்த ஒரு கோடி.
தங்கள் டி,வி.யை, மிஸ்திரி பார்க்க செய்து, டி.ஆர்.பி. ரேட்டிங்கை எகிற செய்வதால், அவருக்கு அளிக்கும் வெகுமதி தான் இந்த லட்சங்கள்.
இப்போது மிஸ்திரியை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
– பா.பாரதி