சாதனைகளின் சங்கமம் இயக்குனர் கே சங்கர்..

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

ராய்ந்து பார்த்தால் ஒரு மனிதனின் படங்களில் இத்தனை வரலாற்று அதிசயங்களா என்று வியப்புதான் மேலோங்கும். அப்படிப்பட்ட அற்புதமான திரைப்பட இயக்குநர், கே.சங்கர் அவர்கள்.

ஆலயமணி, குடியிருந்தகோவில், அடிமைப்பெண் என பிரமாண்டமான காவியங்களை தமிழ்சினிமாவில் தந்த ஒரு பெரிய மேதை..
1950களின் துவக்கத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் எடிட்டராக பணியை ஆரம்பித்தவர். ஏவிஎம் தயாரித்த இந்தி, தெலுங்கு மொழி படங்களுக்கும் சங்கர்தான் எடிட்டர். ரீல்களை கச்சிதமாக வெட்டி திரைப்படத்தை அழகாய் வடிவமைத்து தருவதில் திறமைசாலி. ஆனாலும் அவரின் லட்சியம், படங்களை இயக்கவேண்டும் என்பதிலேயே இருந்தது..

இதற்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது கவியரசு கண்ணதாசனால். சொந்தமாக படத்தை தயாரித்து 1959ல் வெளியிட்டு மருது சகோதரர்களின் வீரத்தை திரையில் காட்டியவர். கண்ணதாசன். அவரின் கை வண்ணத்தால் உருவான வசனங்கள் அனல்பறக்கும். வசனங்களை பேசி தெறிக்க விட்டதன் மூலம் தமிழ் வசன உச்சரிப்பில் நடிகர் திலகம் சிவாஜியைவிட ஒருபடி நான்தான் மேலே என, மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் லட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரன். அந்த சிவகங்கை சீமை படத்தை இயக்கியது கே.சங்கர்தான்.

சிவகங்கை சீமை படத்தில் 15க்கும் மேற்பட்ட பாடல்கள். கண்ணங்கருத்த கிளி கட்டடழகன் தொட்ட கிளி,, கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்… என பல பாடல்கள் ஹிட் அடித்தன.. கே.சங்கருக்கு பாடல்கள் என்றால் கொள்ளை பிரியம் என்பது அவர் முதன்முதலில் டைரக்ட் செய்த இந்த படத்திலேயே தெரியும்.

பெரும் நட்சத்திர பட்டாளங்களை வைத்து சங்கர் இயக்கிய சிவகங்கை சீமை, சிவாஜியை வைத்து பி.ஆர் பந்துலு இயக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் வந்த சில நாட்களிலேயே சுடச்சுட வெளியானது.

ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழின் முதன் டெக்னிக் கலர் படம், அதனால் அதன்முன் கறுப்பு வெள்ளை படமான சிவகங்கை சீமை பின்னடைவை சந்திக்க நேரிட்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி எம்ஜிஆரை வைத்து கேவா கலரில் ஊமையன் கோட்டை என்ற பெயரில் கண்ணதாசன் எடுத்திருந்தால் வேறுமாதிரியாக அமைந்திருக்கலாம்..

எந்த சிவாஜிபடத்தின் முன் வெற்றி வாய்ப்பை இழந்தாரோ அதே சிவாஜியை வைத்து ஆலயமணியை இயக்கினார் சங்கர். எஸ்எஸ்ஆர் சரோஜாதேவி, விஜயகுமாரி எம்ஆர் ராதா என பெருங்கூட்டம் அதில். ஆனாலும் அனைவருக்கும் பங்கை கச்சிதமாய் பிரித்து தந்தார் சங்கர்.

கதை ஒரு பக்கம் அதகளம் செய்தது என்றால் படத்தில் பாடல்களை பார்த்து பார்த்து செதுக்கினார் இயக்குநர் சங்கர்.

சட்டி சுட்டதடா கை விட்டாதடா என்று டிஎம்எஸ் தத்துவமாக பாடினால், இன்னொரு பக்கம், தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே என எஸ்.ஜானகியை வைத்து புல்லாங்குழலை ஊதவிட்டிருப்பார் சங்கர்.

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா, பாடலும் பொண்ணை விரும்பும் பூமியிலே போன்ற பாடல்களெல்லாம் பெரும் செலவே இல்லாமல் பாடல்களை எப்படி படம் பிடிக்கலாம் என்று சொல்லவைக்கும் பல்கலைக்கழக பாடங்கள்..

1962ல் ஆலயமணியை சங்கர் தந்தபோது, அந்த காலத்தில் பாராட்டு மழை பொழியாத பத்திரிகைகளே கிடையாது..
ஆலயமணி தயாராகும்போதே இன்னொரு பக்கம் எம்ஜிஆரை வைத்து பணத்தோட்டம் படத்தை இயக்கினார் சங்கர். அதிலும் பாடல்கள் செமையாக ஹிட் அடித்தன.

சரோஜாதேவியின் தலையில் ரொமாண்டிக்காக தட்டியபடி எம்ஜிஆர் பாட ஆரம்பிக்கும் பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா, பாடல் திரையில் ஓடி முடியும்போது, அடச்சே இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று ஏக்கப்படும் அளவுக்கு பணத்தோட்டம் பாடலை படமாக்கியிருப்பார்

பணத்தோட்டத்தின் இன்னொரு பாடலான, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே…பாட்டு எம்ஜிஆர் தத்துவ பாடல்களில் டாப் டென்னில் ஏறி அமர்ந்துகொண்டது

அதேமாதிரி சங்கர் இயக்கிய பாதகாணிக்கை படத்தில்தான். காலம் காலமாய் வாழும் ‘’வீடுவரை மனைவி, வீதிவரை உறவு காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?’’ என்ற தத்துவ பாடல்.

சிவாஜியின் ஆண்டவன் கட்டளை படத்தில் தேவிகாவின் சிருங்கார முகபாவனைகளை திரையில் பதிவு செய்த விதம், அந்த படத்தை பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும். ஒரு பெண்ணின் அழகு எப்பேர்பட்ட அறிவாளியையும் தடுமாறச்செய்து ஆட்டிப்படைக்கும் என்பதை ஆண்டவன் கட்டளை தேவிகா மூலம் காதல் சொட்டச்சொட்ட சொன்ன விதம், விவரிக்க இயலாதவை.

கைராசி, ஆடிப்பெருக்கு என இன்னொரு பக்கம் ஜெமினி- சரோஜாதேவி காம்பினேஷ னில் கண்ணீர் காவியங்களை தந்து அவற்றை மெகா ஹிட்டாகவும் காட்டியவர் சங்கர்.

பின்னாளில் இந்தி சினிமாவில் புகுந்து தேசத்துக்கே கனவுக்கன்னியாக மாறியவர் ஹேமாமாலினி. அவருக்கு முதன் முதலில் திரையில் வாய்ப்பு கொடுத்தவர் சாட்சாத் நம்ம சங்கரேதான். 1963ல்வெளியான இது சத்தியம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வைத்தார் சங்கர்.

தமிழுக்கும் அமிழ்தென்று பேர், அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று கேஆர் விஜயா பாடுவாரே, அந்த பஞ்சவர்ணகிளி என்ற படமும் சங்கர் இயக்கிய வெற்றிப்படம்தான்.

பாரதிதாசனின் கவிதைகளுக்கு அப்படியொரு பிரியர் சங்கர், கலங்கரை விளக்கம் படத்தில சங்கே முழங்கு, சந்திரோதயம் படத்தில் புதியதோர் உலகம் செய்வோம்,, அதே புதியதோர் உலகம் செய்வோம் பாடல் வேறொரு டியூனில் பல்லாண்டு வாழ்க படத்தில் வரும்.. எல்லாமே டைரக்டர் சங்கரின் முத்திரைகள்..

விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடி பிரிந்து எம்எஸ்வி தனியாக இசையமைத்தது சங்கரின் கலங்கரை விளக்கம் படத்திற்குத்தான்.

காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்…

பொன்னெழில் பூத்தது புது வானில்.. – -கலங்கரை விளக்கத்தின் ஆறு பாடல்களையும் ஆறு விதங்களில் படம் பிடித்தவர் சங்கர்

இரட்டை வேடத்தில் பட்டைய கிளப்பிய எம்ஜிஆரின் குடியிருந்த கோவிலும், அடிமைப்பெண் படங்களையும் அதன் பாடல்களை யும் விறுவிறுப்பான காட்சிகளையும் விவரிக்க நாள் போதாது.. ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம். துள்ளுவதோ இளமையில் ஆரம்பித்து ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா வரை போகவேண்டும்.

எஸ்பி பாலசுப்ரமணியமும், ஜெயலலிதாவும் முதன் முதலாக தமிழ் சினிமாவில் பாடியது சங்கரின் இயக்கத்தில்தான்.. இப்படி எண்ணற்ற முத்திரை சம்பவங்கள் அவரின் வரலாற்றில்..

எம்ஜிஆர், சிவாஜி ஜெமினி ஆகிய மூவரையும் வைத்து பல இடங்களை கொடுத்த சங்கர், பின்னாளில் தொடர்ந்து பக்திப்படங்களை இயக்கி இறையருட் செல்வர் என்ற பட்டத்துக்கே சொந்தக்காரர் ஆனார்.

ஏராளமான மினி நட்சத்திரப்பட்டாளங்களை வெளி நாட்டில் வைத்து படம்பிடித்து 1978ல் வருவான் வடிவேலன் என்ற படத்தை வெளியிட்டார் டைரக்டர் சங்கர். வசூலா அது? தியேட்டர்கள் ஒவ்வொன்றும் பெண்கள் படையெடுக்கும் கோவிலாக மாறிப்போன ஆச்சர்யமான கட்டம்.

இன்றைக்கு ஒவ்வொரு மேடையிலும் இளையராஜா புகழ் பாடுகிறதே ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ என்ற பாடல்.. அதை தனது தாய் முகாம்பிகை படத்தில் உருப்பெறச்செய்தவர் இறையருட்செல்வர் டைரக்டர் சங்கர்தான்..

14 வது ஆண்டு நினைவு நாளில் அவரைப்பற்றி கொஞ்சமாவது பேசுவோம்.