டெல்லி: சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை சிஆர்பிஎப் படையினர் பொறுப்பேற்றிருக்கின்றனர்.

காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி,காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி எனப்படும் சிறப்புப் படை பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றது.

28 ஆண்டுகள் கழித்து, இந்த நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு இருக்கிறது. அதற்கு பதிலாக, துணை ராணுவ படையான சிஆர்பிஎப் மூலம் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, காந்தி குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியை சிஆர்பிஎப் படையினர் பொறுப்பு எடுத்துக் கொண்டனர். துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் டெல்லியில் உள்ள சோனியாவின் நம்பர் 10, ஜன்பத் சாலை இல்லத்துக்கு பாதுகாப்பு அளிப்பர்.

அதேபோன்று துக்ளக் லேன் பகுதியில் இருக்கும் ராகுல் வீட்டுக்கும், லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள பிரியங்கா காந்தி இல்லத்துக்கும் பாதுகாப்பு வழங்குவர். சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர்கள் ஒத்திகை பார்ப்பர்.