துணை ராணுவப் படையினரை வலுப்படுத்தும் புதியவகை வரவுகள் எவை?

புதுடெல்லி: காஷ்மீரில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடவும், பல மாநிலங்களில் நக்சல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும், சிஆர்பிஎஃப் பிரிவுக்கு, 40000 புல்லட்ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் மற்றும் 170 கவச வாகனங்களுக்கு அனுமதியளித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; துப்பாக்கிச் சூடு, கிரனேட் தாக்குதல் மற்றும் கல்வீச்சு உள்ளிட்டவற்றிலிருந்து பாதுகாப்பு படையினரைக் காக்கும் வகையில், 80 மாருதி ஜிப்ஸி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் 176 நடுத்தர புல்லட் ப்ரூஃப் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொரு வாகனத்திலும் 5 முதல் 6 ஆயுதம் தாங்கிய வீரர்கள் அமரலாம்.

இந்த வாகனங்கள், கிரனேட் தாக்குதல், துப்பாக்கிச் சூடு மற்றும் இன்னபிற ஆபத்தான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பை அளிக்கும். மேலும், துணை ராணுவப் படைகளை நவீனமாக்கும் வகையில், 42000 இலகுரக புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகளுக்கும் அரசு அனுமதியளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வகை ஜாக்கெட்டுகள், தற்போது நடைமுறையிலிருக்கும் குண்டு துள‍ைக்காத ஜாக்கெட்டுகளுடன் ஒப்பிடுகையில், 40% எடைக் குறைவானவை என்று கூறப்படுகிறது. தற்போது ஜாக்கெட்டுகள் 7-8 கிலோ வரை எடையுள்ளவை.