கிரிப்டோ கரன்சியை சட்டபூர்வமாக்கிய தாய்லாந்து.
பாங்காக்
தாய்லாந்து அரசு கிரிப்டோ கரன்சியை சட்டபூர்வமாக்கி உள்ளது.
கிரிப்டோ கரன்சி என்பதை இணைய தளப் பணம் எனவும் சொல்லலாம். இவ்வரிசையில் பிட் காயின் போன்றவை வருகின்றன. இது கண்ணுக்கு தெரியாத பணம் ஆகும். ஒவ்வொரு நிமிடமும் இந்த பணத்தின் மதிப்பு ஏறி இறங்கும். இவ்வகை பண பரிவர்த்தனைகளை உலகின் பல நாடுகள் எதிர்த்து வருகின்றன. இவை ஒரு வகையான சூதாட்டம் எனவும் சில நாடுகள் குறிப்பிடுகின்றன.
இந்த கிரிப்டோ கரன்சி குறித்து தாய்லாந்து நாட்டில் கடும் விவாதங்கள் நடைபெற்றன. தற்போது இந்த விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தாய்லாந்து அரசு இதை சட்டபூர்வமாக்கி உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத் திருத்தம் இயற்றப்பட உள்ளது.
இது குறித்து தாய்லாந்து நாட்டின் பங்கு வர்த்தகத் துறை இயக்குனர் அர்சாரி, “தாய்லாந்து நாட்டில் கிரிப்டோ கரன்சி சட்டபூர்வமாக்கப் பட்டுள்ள நிகழ்வு இதை சூதாட்டம் என நினைக்கக் கூடாது என மக்களுக்கு அறிவுறுத்துகிறது. இதனால் தாய்லாந்தில் பிட்காயின், ஈதரியம், லைட்காயின், ரிப்பிள் ஸ்டெல்லார் போன்றவைகளின் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளார்.