சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த 360 டிகிரி வீரர் என்கிற பெயருக்கு சொந்தக்காரரான ஏ.பி டிவில்லியர்ஸ், நடப்பு உலக கோப்பைக்காக ஓய்விலிருந்து விலகி தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட தயார் என்று கூறியும், அதை தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் நிராகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ செய்தியில், ”டிவில்லியர்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் தென் ஆப்பிரிக்கா முதற்கட்ட 15 வீரர்கள் அணியை அறிவிக்க இருப்பதற்கு முன்பு, தன் வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.  ஆனால் தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் டிவில்லியர்ஸ் கோரிக்கையை நிராகரித்துள்ளது. கேப்டன் ஃபாப் டு பிளேசிஸ், தலைமைப் பயிற்சியாளர் ஒட்டைஸ் கிப்சன், லிண்டா ஸாண்டி ஆகியோரை சந்தித்து தன் ஆசையை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அது சாத்தியமில்லாத ஒன்று என்று அவர்களால் அறிவுருத்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், டிவில்லியர்ஸின் கோரிக்கை பரிசீலிக்கப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தென்னாப்ரிக்க அணி நிர்வாகம், உலக கோப்பை போட்டியில் விளையாடப்போகிறோம் என்று அணி வீரர்களில் ஒரு சிலர் கடந்த ஓராண்டாக அணியுடன் சேர்ந்து ஒரு பிணைப்பு ஏற்பட்ட நிலையில், ஏ.பி டிவில்லியர்ஸ் வருகை அணிக்கு உதவாது என்று, அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் ஓய்வு அறிவித்த டிவில்லியர்ஸ், அதன் பிறகு கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டியிருக்க மாட்டார் என்றும், அவர் ஓய்வுக்கு பின் உலக கோப்பைக்கு ஏறக்குறைய ஓராண்டு இருந்த காரணத்தால் அணித் தேர்வு அளவுகோலில் இது அடங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தென்னாப்ரிக்க உள்நாட்டு கிரிக்கெட், தென்னாப்ரிக்க அணிக்கு சில போட்டிகளை உலக கோப்பைக்கு முன்பு ஆடுவது போன்ற தேர்வு கொள்கை அளவுகோல் டிவில்லியர்ஸுக்கு பொருந்தவில்லை என்பதால், அவருக்கு மாற்றாக கருதப்படும் வான்டெர் டூசன் தேர்வு செய்யப்பட்டார். வான்டெர் டூசன் சிறப்பாக அடும் நிலையில், டிவில்லியர்ஸை மீண்டும் அழைத்தால், அது வான்டெர் டூசனுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்றும் தென்னாப்ரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.