கொரோனா : ரெம்டெசிவிர் மருந்து விலையைக் குறைக்க சி எஸ் ஐ ஆர் யோசனை

டில்லி

கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெமெடெசிவிர் மருந்து விலையைக் குறைக்க வேண்டும் என அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக் குழு (சி எஸ் ஐ ஆர்) யோசனை தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கான மருந்து என எந்த மருந்தும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ரெம்டெசிவிர் மருந்து சுகாதார அமைசகத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  இந்த மருந்து பொதுவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆக்சிஜன் உதவியுடன் இருக்கும் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது.   இந்த மருந்தைப் பயன்படுத்துவது மூலம் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கால கட்டம் குறைந்து விரைவில் குணமடைகின்றனர்

இந்த மருந்துக்கு தற்போது தேவை அதிகமாக உள்ளது.   இதைத் தயாரிக்க அமெரிக்க நிறுவனமான ஜிலாட் உடன் சிப்ளா, ஹெடெரோ மற்றும் மைலான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் இட்டுள்ளன.  இந்த மருந்தின் விலை ஒரு டோசுக்கு ரூ.4000 முதல் ரூ.5000 வரை உள்ளது.   மொத்த சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்து விலை மட்டும் ரூ.45000 முதல் ரூ.50000 வரை ஆகின்றது.

இந்தியாவில் மருந்துகளின் விலையைத் தேசிய மருந்துப் பொருட்கள் விலை ஆணையம் நிர்ணயம் செய்து வருகிறது.   எனவே அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக் குழு ரெம்டெசிவிர் மருந்து விலையை உற்பத்திச் செலவுக்கு ஏற்றபடி அமைக்க உத்தரவிட இந்த ஆணையத்துக்கு யோசனை தெரிவித்துள்ளது.   அவ்வாறு மாற்றி அமைக்கப்பட்டால்  ரெம்டெசிவிர் மருந்து விலை மிகவும் குறைந்து கொரோனவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் சிகிச்சை செலவு குறைய வாய்ப்புள்ளது.