கொல்கத்தா:

பிஎல் தொடரின் 29வது லீக் ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. சிஎஸ்கே அணி வீரர்  சுரேஷ் ரெய்னாவின் அதிரடி ஆட்டத்தில், கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

ஐபில் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மாலை 4 மணிக்கு  சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

2வது போட்டி இரவு 8 மணிக்கு  ஹைதரபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகறது.

சிஎஸ்கே, கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி  மட்டையுடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய  சுனில் நரேன் 2 ரன்னிலும், நிதிஷ் ரானா 21 ரன்னிலும், ராபின் உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்னிலும், ஆண்ட்ரு ரசல் 10 ரன்னிலும் வெளியேறினர்.  ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த கிறிஸ் லின் 51 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரியுடன் 82 ரன்னில் அவுட்டானார். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 161 ரன்களை எடுத்தது.

சென்னை அணி சார்பில் இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 162 ரன்களை இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய வாட்சன் 6 ரன்னில் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தால், டு பிளசிஸ் நிதானமாக ஆடி வந்தார். அவரும்  24 ரன்னிலும், அம்பதி ராயுடு 5 ரன்னிலும், கேதார் ஜாதவ் 20 ரன்னிலும், டோனி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இருந்தாலும் சுரேஷ் ரெய்னா தொடர்ந்து நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடி அரை சதத்தையும் தாண்டி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இறுதியில் சென்னை அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுரேஷ் ரெய்னா 58 ரன்னுடனும், ஜடேஜா 31 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

சென்னை அணி விளையாடிய ஏழு லீக் ஆட்டத்தில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளியுடன் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.

ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணியுடன் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இன்றும் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்ட நாயகனாக இம்ரான் தாஹிர் தேர்வு செய்யப்பட்டார்.