சென்னை: கடந்த சில நாட்களாக தமிழக மக்களை அச்சுறுத்தி வந்த நிவர் புயல் அதிகாலை 2.30 மணிக்கு முழுமையாக கரையை கடந்துள்ள நிலையில், டிசம்பர் மாதம் 2ந்தேதி புதிய புயல் உருவாக உள்ளதாகவும், இந்த புயலும் கடலூர் அருகே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தனியார்  வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியதுடன், நேற்று அதி தீவிர புயலாக மாறியது. நிவர் புயல் ஆரம்பம் முதலே போக்கு காட்டி வந்தது. இடையில் ஒரே இடத்தில் சில மணி நேரம் நிலை கொண்டது. இதனால் புயல் கரையை கடப்பது குறித்த நேரம் அறிவிப்பதில் இழுபறி நீடித்தது. இதனால்  புயல் கரையை கடக்க மேலும் தாமதமாகும் என கூறப்பட்டது.
இதையடுத்து, நேற்று நள்ளிரவு  புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நவம்பர் 25 நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், நவம்பர் இன்று அதிகாலை  2.30 மணிக்கு முழுவதும் கரையைக் கடந்தது.  அப்போது  140 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தற்போது புயலின் தீவிரம் குறைந்து காற்று வீசி வருகிறது. இதுவும் ஓரிரு மணி நேரத்திற்குள் குறைந்து விடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வரும் 29ந்தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இந்த புயல் வரும் டிசம்பர் 2ந்தேதி அன்று புயலாக மாற வாயப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் அறிவித்து உள்ளனர்.  மேலும், இந்த புதிய புயல் கடலூருக்கு தெற்கே டிசம்பர் 2ம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த புயலின் வேகம்  புயலின் வேகத்தை விட குறைந்த அளவிலேயே இருக்கும்,  பெரிதளவில் சேதம் இருக்காது என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
நிவர் புயலின் மிரட்டல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதிய புயல் உருவாகி வருவதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.