ணக்கம் தளபதி அவர்களே..

தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பிறகு தலைவராக நாங்கள் ஏற்றுக்கொள்வது உங்களைத்தான்.

அதற்காக தலைவர் கலைஞர் அளவுக்கான தகுதிகளை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. எப்படி ஒரு சூரியன், ஒரு பூமி, ஒரு நிலவோ.. அது போல ஒரு கலைஞர்தான்.

அதே நேரம் தலைவரைப் பார்த்து நீங்கள் சில விசயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறோம்.

அதில் ஒன்று படிப்பு.

பழைய செய்திகளை – வரலாற்றை – அறிந்துகொள்வதில் ஓரளவேனும் அக்கறை செலுத்துங்கள்.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நீங்கள் பேசியது….

“மின்சார கட்டணத்தை ஒரு பைசா உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அறவழியில் போராடினார்கள்.அப்படி அறவழியில் அமைதியாகப் போராடிய விவசாயிகள் மீது அன்றைய எம்ஜிஆர் அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது..” என்று   ஈரோட்டில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் பேசினீர்கள்.

நீங்கள் குறிப்பிட்ட அந்த ஒரு பைசா மின்சாரக் கட்டண எதிர்ப்பு போராட்டம் நடந்தது உண்மை. துப்பாக்கிச் சூடு நடந்ததும் உண்மை.

ஆனால் அது நடந்தது தலைவர் கலைஞர் ஆட்சியின் போதுதான்.

(எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு வேறு.)

1970களின் துவக்கத்தில் கலைஞர் ஆட்சிக்காலத்தில் நடந்தஅந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னரே நாராயணசாமி நாயுடு தலைமையிலான உழவர் பாதுகாப்பு இயக்கம் வலுவடைந்து-விவசாயிகள் போராட்டம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

நீங்கள் பேசிய மேடையில், செல்லமுத்துவும் இருந்தார். அவர், அந்தக் காலத்தில் நாராயணசாமி நாயுடுவுடன் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டவர்.

அக்காலகட்டங்களில் நடந்த விவசாயப் போராட்டங்கள் உட்பட, பல்வேறு வரலாற்றுத்தரவுகளை தன்னிடம் கொண்டிருப்பவர் நமது கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். அவரைக் கேட்டாலே சொல்வார்.

இன்னொரு சம்பவம்.. பழசுதான். ஆனால் அவசியம் சுட்டிக்காட்ட வேண்டிய நிகழ்வு.

திருப்பூர் மாநகராட்சி தொடக்க விழாவில் பேசிய நீங்கள், “ கொடி காத்த குமரன் பிறந்தது திருப்பூரில்” என்று பேசினீர்கள். கொடிகாத்த குமரன் இறந்ததுதான் திருப்பூரில்.

தவறாக நீங்கள் பேசியதை மேடையிலேயே கலைஞர் சுட்டிக்காட்டினார்.

அடுத்து ஒரு சம்பவம்.

ஈரோடு மாநகராட்சி தொடக்க விழாவில் “பழம்பெருமை பேசி பாராட்டும் உலகம் ஈரோட்டு பூகம்பத்தால் இடியுதுபார் ” என்று பாரதிதாசன் எழுதியதாய் சொன்னீர்கள். அதை எழுதியவர் உங்கள் தந்தையும் எங்கள் தலைவருமான கலைஞரேதான்.

கலைஞரின் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், நாவல்கள்.. என்று தேடித்தேடி படிப்போம் நாங்கள். நீங்கள்..?

வரலாறு முக்கியம் தளபதியாரே..!

வரலாறு மட்டுமல்ல.. பூகோளமும் முக்கியம்.

2008ம் வருடம்.. அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அந்த விழாவில் பேசிய நீங்கள், ஒகேனக்கல் அருவிக்கு ஆந்திராவில் இருந்து நீர் வருவதாக பேசினீர்கள். கர்நாடகத்திலிருந்து வரும் காவிரி நீர்தான் அது என்பதையே அறியவில்லையா நீங்கள் என்று மனம் துடித்தது.

வரலாறு, புவியியல் தெரிவது மட்டுமல்ல.. தளபதியாரே.

வார்த்தை தடுமாறக்கூடாது. தலைவர் கலைஞருக்கு… மூப்பிலும், உடல் தளர்விலும் வார்த்தைகள் தடுமாறியதே இல்லையே!

ஆனால் நீங்கள்..?

ஜெனிவா சென்ற தற்குறி தான்ஒரு எம்எல்ஏ என்பதையே மறந்து தன்னை மெம்பர் ஆப் பார்லிமென்ட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார் என்று மாற்றுக்கட்சியினர் கிண்டலடிக்கும்போது அத்தனை வருத்தம் வருகிறது தளபதியாரே.

அது மட்டுமா.. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை வாழப்பாடி பழனிச்சாமி என்கிறீ்ர்கள். .

தமிழில் தடுமாறக்கூடாது தளபதி அவர்களே..

ஜெயலிலதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு என்பது தி.மு.க.வின் சாதனை. ஆனால் நீங்கள் ஒரு  செய்தியாளர் சந்திப்பில், “ஜெயலலிதா மீது புனையப்பட்ட வழக்கு” என்கிறீர்கள்.

புனையப்பட்ட என்றால் அர்த்தம் தெரியும்தானே தளபதி? சுருக்கமாகச் சொன்னால் பொய் வழக்கு என்று அர்த்தம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்கு பதிலாக காவேரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்றீர்கள். இது எவ்வளவு பெரிய  பிழை?

இப்படி பேசலாமா நீங்கள்?

பேச்சு போக்கில், “கொலைக்குற்றவாளி ஜெயலலிதா” என்று சொல்லிவிட்டீர்கள்.

இதெல்லாம் பெருந்தவறு தளபதியாரே..!

பேசுவது மட்டுமில்லை.. எழுத்திலும் தவறிழைக்கிறீர்கள்.

நீட் குறித்த அறிக்கையில் “அறிவார்ந்த மருத்துவர்கள் தேவைப்படும் அதே நேரத்தில் எளிய மருத்துவர்களும் தேவை” என்கிறீர்கள்.

அப்டியானால் கிராமப்புற மருத்துவ மாணவர்களுக்கு அறிவிருக்காதா.? அறிவார்ந்தவர்களாக இருக்கமாட்டார்களா?

என்ன தளபதியாரே..!

அது மட்டுமா..

சமீபத்தில் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, “ஆளுநரின் 15 நாள் அவகாசம் கொடுத்திருக்கும்போது அவசர அவசரமாக ஏன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இது குதிரை பேரம் நடக்க வாய்ப்பை ஏற்படுத்தும்” என்றீர்கள். இது என்ன லாஜிக் தளபதியாரே..!

நாட்கள் செல்லச்செல்லத்தானே குதிரை பேரம் நடக்க வாய்ப்பு அதிகமாகும்!

அப்புறம் தளபதியாரே.. தலைவர் கலைஞரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்களில் ஒன்று நினைவாற்றல். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளையும் தன் நினைவடுக்கிலிருந்து – ஒரு அலமாரியில் இருந்து புத்தகத்தை லாவகமாக உருவி எடுப்பதுபோல – எடுத்து பேசுவார் கலைஞர்.

ஆனால் நீங்கள்…

செய்தியாளர்களிடம் பேசும்போதே.. தலைமை செயலாளர் பெயரை மறந்துவிடுகிறீர்கள்.

எங்களது வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள் தளபதியாரே..!

அப்புறம் ஒரு விசயம்..

சமீபத்திய தங்கள் பிறந்தநாளுக்கு மாலை மரியாதை, சால்வை துண்டு எல்லாம் வேண்டாம்.. புத்தகங்கள் போதும் என்றீர்கள்.. மனமுவந்து பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை அன்பளித்தோம்.

அவற்றை அறிவாலய நூலகத்தில் சேருங்கள். அவ்வப்போது அந்த புத்தகங்களில் சிலவற்றை படியுங்கள்.

ஆம் தளபதியாரே.. நீங்கள் தலைவராக உயர வேண்டும் என்ற தீரா ஆவலிலேயே இதைச் சொல்கிறேன்.

என்றும் தங்கள் தொண்டன்,

இளம்பரிதி.

பின் குறிப்பு: கலைஞருக்கு என் அண்ணன் செம்பரிதி,  எழுதிய கடிதம்.

எங்கே அந்தச் சூரியன்?:  கலைஞருக்கு ஒரு உடன் பிறப்பின் கடிதம்