டெல்லி:
நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நோக்கமாக ஊரடங்கு  மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில முதல்வர்களுடன் மீண்டும் பிரதமர் மோடி வரும் திங்கட்கிழமை (27ந்தேதி) காணொளி காட்சி மூலம்  மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் தறபோதுதான் தமிழகம் உள்பட பல மாநிலங்களில்  தீவிரமடைந்து வருகிறது. இதனால் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து,  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இமத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்தில் கொரோனாவை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பலன்கள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.  மேலும், சில மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து வரும் திங்கட்கிழமை மீண்டும் அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருப்பதாகவும், அதன்பிறகே, ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது  மற்றும் மே3ந்தேதிக்கு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்தியஅரசு ஆலோசித்து வருவதாகவும்,  மாநில முதல்வர்களுடன் ஆலோசனைக்குப் பிறகு பிரதமர் மோடிவிரைவில் அதுகுறித்து அறிவிப்பார் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.