ஊரடங்கு, மீன்பிடி தடைக்காலம்: நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி…

சென்னை:

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள மீனவர்கள், தற்போது 45 நாட்கள் மீன்பிடித் தடைக்காலமும் தொடங்கி உள்ளதால், அவர்கள் மேலும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில், நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளில் மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க செல்லலாம் என்று அறிவித்துள்ள மீன்வளத்துறை, விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்து உள்ளது.

21நாட்கள் கொரோனா ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், மே 3ந்தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். இதற்கிடையில், தமிழகஅரசும் ஏப்ரல் 30ந்தேதிவரை ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், 45நாட்கள் மீன்பிடித் தடைக்காலமும் இன்று தொடங்கி உள்ளது. இதனால் மீனவர்கள் மேலும் பாதிப்படையும் சூழல் உருவாகி உள்ளது. இதை கருத்தில்கொண்டு,  நாட்டுப் படகுகள் மற்றும் இயந்திரம் பொருந்திய நாட்டுப் படகுகளில் தொடர்ந்து மீன் பிடிக்கலாம் என தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக தமிழக மீன்வளத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ஊரடங்கு காலத்தில் மீன் பிடித்தலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் நிலையில் விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதியில்லை.

எனினும் நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளில் மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க செல்லலாம்.

மீன்பிடி இயங்குதளம், துறைமுகம், கடற்கரைப் பகுதிகளில் மீன்களை பொது ஏலத்திற்கு விடக்கூடாது.

மீன் பிடித்தல், மீன் இறக்குதல் உள்ளிட்டவைகளுக்கு குறைந்த அளவிலான நபர்களையே ஈடுபடுத்த வேண்டும்.

படகு உரிமையாளர்கள் மீனவர்களுக்குத் தேவையான முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் வழங்க வேண்டும்.

தினமும் எத்தனை படகுகள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என்பதை சம்பந்தபட்ட கடலோர மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு முடிவு செய்யும்.

இவ்வாறு தமிழக மீன்வளத்துறை தெரிவித்திருக்கிறது.

முன்னதாக மீன் பிடி தொழிலுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.