மேட்ரிட்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஸ்பெய்ன் நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. அந்நாட்டின் இளவரசியே அந்த வைரஸிற்கு பலியான சம்பவம் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சான்செஸ், “சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல்வேறு நாட்டு மக்களையும் பாதித்து வருகிறது. ஸ்பெயின் நாட்டில் இந்த வைரஸ் காரணமாக பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,24,736 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 11,744 என்பதாகவும் உள்ளது.

நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கொரோனா வைரஸ் நோயாளிகள் நிரம்பியுள்ளனர். மிகுந்த எச்சரிக்கையுடன் நமது சுகாதார அமைப்பை மீட்க வேண்டிய நேரம் இது என நம்புகிறோம். மூன்று வார கால தனிமைப்படுத்தல் நல்ல பலனை தருகிறது என்பதை நாங்கள் அறிவோம்.

இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி 15 நாள் நாடு தழுவிய அவசர கால நிலை பிறப்பிக்கப்பட்டது. தற்போது அவசர கால அறிவிப்பு இம்மாதம் 25ம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளது. இதன்பொருட்டு நாடாளுமன்றத்தில் அனுமதி கேட்கப்படும்” என்றார்.