க்னோ

கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் மத்திய அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், கங்கை ஆற்றின் நீர் குறிப்பிடத்தக்க அளவில் நன்கு  தூய்மை அடைந்துள்ளது.

அதிக மக்கள் கூடுவதால்  கங்கை ஆறு கடந்து செல்லும் இடங்கள் பெரும்பாலும் மாசுடன் இருக்கும். இந்நிலையில் மக்கள் வெளியே செல்வதற்கு தடை நீடிப்பதால் கங்கையாற்றின் தூய்மை மேம்பட்டுள்ளதாக உத்திரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல தலைவர் கலிகாசிங் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “தற்போது கங்கை ஆற்றின் நீரில் ஆக்ஸிஜன் அளவும் கூடியுள்ளது. மலையில் உற்பத்தியாகும் நீரில் லிட்டருக்கு 8.9 மில்லிகிராமும்,   தரையில் செல்லும் நீரில் 8.3 மில்லிகிராம் அளவாகவும் உள்ளது நல்ல முன்னேற்றம்.  ஏனெனில் நல்ல நீரில் ஆக்ஸிஜன் அளவு லிட்டருக்கு  குறைந்தது 7 மில்லிகிராம் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கங்கையாறு உத்திரப்பிரதேசம், பிஜ்னோர் மாவட்டத்தில் நுழைந்து மீரட், அலிகார், கான்பூர், வாரணாசி உள்ளிட்ட மாவட்டங்களை கடந்து செல்கிறது.  இதில் குறிப்பாக கடந்த சில நாட்களாக கான்பூர் மாவட்டத்தில் கங்கை நீர் மிகவும் தூய்மையாக உள்ளது என்றார்.

மறைவாக எந்தக் கழிவுகளும்,  குப்பைகளும் ஊரடங்கு காலத்தில் நீரில் கலக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. வடிகால்கள் பலவும் ஆறுடன் கலக்கவில்லை.  எனவே ஊரடங்கு காலத்தில் கங்கை நீரின் தரமும் உயர்ந்துள்ளது என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

மேலும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் தான் நீர் மாசுபடுவதற்கு பெரும்பான்மைக் காரணம். சில நாட்களாக நச்சுக் கழிவுகளை ‌‌வெளியேற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதும் கங்கையின் தூய்மைக்கு  காரணம் என்றனர்.

இது குறித்து மதகுரு ஒருவர் கூறுகையில், நீர் மாசுபாட்டை தடுக்க அரசின் பல திட்டங்கள் செய்ய முடியாததையும் இந்த ஊரடங்கு செய்துள்ளது என்றார்…..

கங்கை ஆற்றை தூய்மையாக்க மத்திய அரசு “நவோமி கங்கா” எனும் திட்டத்தை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது…