புதுச்சேரி:

புதுச்சேரியில் வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் மீண்டும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து அனைத்து கடைகள், உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மதுபான கடைகள் இரவு 8 மணி வரை திறக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் ஐந்தாவது பொதுமுடக்கத்திற்கு பிறகு கடந்த ஜூன் 1ந்தேதி முதல் கட்டுப்பாடுகளில் தளர்வு விதிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து அனைத்து கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் பகல் 2 மணி ஜூன் 2 ந்தேதி வரை செயல்பட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி அறிவிப்பின்படி புதுச்சேரியில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுபாடுகளை தளர்த்தி வரும் ஜூலை 3ந்தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து கடைகளும், உணவகங்கள், பெட்ரோல் நிலையம் மற்றும் மதுபான கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்றும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலு‌ம் மத்திய அரசின் அறிவுறுத்தல்படி வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தடை இல்லை. ஆனால் அவர்கள் முழுமையாக பரிசோதனை செய்த பின்பே உள்ளே அனுமதிக்கப் படுவர்கள் என்றும் மத்திய அரசுக்கு இதுவரை பல்வேறு கோரிக்கைகள் வைத்து 17 கடிதம் எழுதி உள்ளேன். கோரிக்கைகளுக்கு பதில் எதுவும் தரவில்லை. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னுடைய கோரிக்கையை ஏற்று மேலும் ஐந்து மாதங்களுக்கு இலவச அரிசி பருப்பு வழங்கியதற்கு பாரத பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.