ஸ்கோர்ல் டாட் இன் இணைய இதழில்,  ஷோயாப் டானியல் அவர்கள் எழுதிய கட்டுரை:
இந்திய பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ளநோட்டை அகற்றவும் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் எமர்ஜென்சி நிலை போன்ற நிலையே தற்போது நிலவி வருகிறது..
மத்தியப்பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் ரேஷன் கடை சில்லரை பிரச்சினை காரணமாக ஒரு கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது.
thukluk-mod
இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளிலும், ஏடிஎம்-களிலும்  மக்கள் எப்போது திறக்கும் என்று நீண்ட வரிசைகளில் காத்திருக்கக் தொடங்கினர். ஒருசில இடங்களில் ஏழை மக்கள் முந்தையநாள் இரவே வந்து காத்திருந்தனர்.
இன்னும் சில வங்கிகளிலும் ஏடிஎம்-களில் கைகலப்பும் தாக்குதல்களும் ஏற்பட்டன. சில வங்கிகள் பொது மக்களால் தாக்குதலுக்கும் ஆளானது.
பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வாங்க முடியாமலும், அன்றாடை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் பரிதவித்தனர்.
tukluk3
நோயாளிகள் தங்களது மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் அல்லாடினர். இதன் காரணமாக மருத்துவ சிகிச்சை கொடுக்க முடியாமல் மரணத்தை தழுவியவர்களும் உண்டு.
விவசாயிகள் தங்களது தானியங்களை விற்கவும் வாங்கவும் முடியாமல் தவித்தனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் வேறு எங்கும் இல்லை… நமது இந்திய நாட்டில்தான்…
பிரதமர் மோடியின் ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு மக்கள் சந்தித்த அவலங்களின் நிலையே மேலே கூறப்பட்டவை.
மோடியின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள்  ‘துக்ளக் தர்பார்’ என்று விமர்சித்து வருகின்றனர்.
யார் இந்த துக்ளக்?
14ம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட சுல்தான் மன்னர்தான் முகமது பின் துக்ளக் என்பவர்.
இவரது ஆட்சியில் தலைநகராக இருந்த டெல்லியை மாற்றிவிட்டு புதிய தலைநகராக தெளலதாபாத் எனப்படும் தற்போதைய மகாராஷ்டிராவை அறிவித்தார்.
துக்ளக்கின் இந்த திடீர் நடவடிக்கை பொதுமக்களை நிலைகுலையச் செய்தது.  எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் அவர் எடுத்த முடிவால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள்.
அது துக்ளக் மன்னருக்கு சர்வாதிகாரி என்ற பெயரை பெற்றுத் தந்தது. ஆனால், அவர் அதைப்பற்றியோ, மக்கள் பற்றியோ கவலைப்படாமல், மேலும் இதுபோன்ற திடீர்  அறிப்புகளை வெளியிட்டு மக்களை மேலும் சங்கடத்துக்கு உள்ளாக்கினார்.
சர்வாதிகாரத்தன்மையோடு துக்ளக் எடுத்த மற்றொரு முடிவு வரலாற்று பேரழிவாக கருதப்படுகிறது.
அதுதான், தற்போது மோடி எடுத்திருக்கும் பணம் செல்லாது என்ற முடிவு போன்றது.
மோடியைப் போலவே துக்ளக் மன்னரும் பணம் விஷயத்தில் எடுத்த அதிரடி முடிவு பெரும் தோல்வியைச் சந்தித்தது. முன்னேற்பாடுகள் சரிவர செய்யாமல் அவர் எடுத்த முடிவு சுல்தானிய அரசுக்கு பலவீனமாக அமைந்தது.
அதுபோலவே தற்போதும், மோடியின் அறிவிப்பு காரணமாக எழுந்துள்ள சிக்கல்கள் பணம் மீதான நம்பகத்தன்மையை அறவே வேரறுத்துவிடும்.
tukluk1
மிகப் பெரிய செல்வமாகக் கருதப்பட்ட ரூபாய் நோட்டுகள், தற்போது வெறும் காகிதமாகவே பார்க்கப்படுகிறது.
நம்மிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்த வெறும் காகிதங்கள் என்றும், தற்போது வழங்கப்படுகிற ரூ.2000 நோட்டுகள் மட்டுமே மதிப்பு உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
பழைய காலத்தில் முன்னோர்கள் பண்டமாற்று முறையையே கையாண்டார்கள், அதன் பிறகு, நாணயங்களை பயன்படுத்தத் தொடங்கியபோது நாணயங்கள் பெரும்பாலும் தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்புள்ள உலோகங்களால் செய்யப்பட்டவையாகவே இருந்தன.
அதன் பின்னர் ஏழாம் நூற்றாண்டில், புதிய நவீன காகிதப் பணத்தை சீனா அறிமுகம் செய்தது. அதன்படி தங்கம், வெள்ளி, பட்டு போன்றவற்றுக்கு ஈடாக இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
சீனாவின் இந்த புதிய பணப்பரிமாற்ற முறையை மேலைநாடுகள் பின்பற்றுவதற்கு முன்னரே இந்தியாவில் செயல்படுத்தி நிர்வகித்தது டில்லியை ஆண்ட துக்ளக் மன்னன்தான்.
இந்தியாவின் பெரும்பான்மையான  வடக்குப் பகுதிகளை ஆட்சி செய்த துக்ளக் மன்னன் 1329ம் ஆண்டு தெளலதா பாத்தை தலைநகரமாக அறிவித்த பின்னர், பண அமைப்பு முறையை அறிமுகப்படுத்தினார்.
செம்பு மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட இந்த நாணயங்களை குறிப்பிட்ட அளவு தங்கம் மற்றும் வெள்ளிக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இதற்கு டாங்கா என்று பெயரிடப்பட்டிருந்தது.
இந்த புதிய பணப்பரிமாற்ற திட்டத்தை துக்ளக் அறிமுகப்படுத்தியபோது, அதை எதிர்கொள்ள மக்கள் பெரிதும் சிரமப்பட்டார்கள்.
புதிய பணமாற்ற திட்டத்தைஅறிமுகப்படுத்திய துக்ளக் அதை செயல்படுத்த முடியாமல் தோல்வியை சந்தித்தார். காரணம், துக்ளக் வெளியிட்ட நாணயம் போலவே போலியாக நாணயங்கள் தயாரிக்கப்பட்டு வெளியாயின.
இதன் காரணமா துக்ளக் அரசு, ரூபாய் நோட்டுத் தயாரிப்பில் புதிய உத்திகளை கையாளத் தொடங்கியது. அதன்படி, போலி நாணயத் தயாரிப்பை தடுக்கவும், பாதுகாப்பு நோக்கத்துக்காகவும் பிரத்யேகமான பல அடையாளங்களைக் கொண்ட ரூபாய் நாணயங்கள் அச்சிடத் தொடங்கியது.
எனினும், மோசமான திட்டமிடல் காரணமாக புதிய நாணயங்களில் எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களையும் சேர்க்க நேரமில்லாமல் போனது.
துக்ளக் அறிமுகப்படுத்திய நாணயமானது, போலிகள் தயாரிக்க முடியாதளவுக்கு பாதுகாப்பான அளவில் வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை என்றும், அது  கறுப்புப் பணம் புழங்குவதற்கான சாத்திய கூறுகளை ஏற்படுத்தியதாகவும் இதன் காரணமாக  பணவீக்கத்துக்கு வழிவகுத்தது. அதன் பின்னர், டாங்கா எனப்படும் துக்ளக் அறிமுகப்படுத்திய நாணயம் மதிப்பிழந்து போனது.
இதனால் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதை சரிசெய்ய துக்ளக் தலைமையிலான அரசு மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
tukluk2
டாங்கா நாணயங்களை வைத்திருப்பவர்கள் நியாயமான முறையில் அவரது நாணயங்களை கொடுத்துவிட்டு அதற்கு நிகரான தங்கம் மற்றும் வெள்ளியை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அது.
அதிலும் ஒரு குளறுபடி நடந்தது. ஏராளமான போலி நாணயங்கள் புழங்கியதால் சரியான முறையில் இந்தப் பரிமாற்றத்தை நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆனது.  அப்போது ஏற்பட்ட நாணய குளறுபடிகள் கற்பனை செய்து பார்க்க முடியாதளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தின.
இந்த நாணய புரட்சி காரணமாக  துக்ளக் மன்னனின் ஆட்சி கவிழ்ந்தது. 1351ல் துக்ளக் இறந்த பிறகு, அவரது ராஜ்யத்தின் முக்கியப் பகுதிகளான வங்காளம் மற்றும் டெக்கான் போன்றவை சுல்தானிய அரசிடமிருந்து தாமாகவே தம்மை விடுவித்துக் கொண்டன.
இதுதான் துக்ளக் ஆட்சி. இதன் பரிணாம வளர்ச்சியாக தற்போது இந்தியா ஆளும் மத்திய அரசின் தலைமை அமைச்சரான பிரதமர் மோடி இருக்கிறார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெரிய வருகிறது