ரூபாய் நோட்டு விவகாரம்: காலக்கெடுவை நீடிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டில்லி:

ழைய ரூபாய் நோட்டை பயன்படுத்த கால அவகாசம் அளிக்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

கடந்த மாதம் 8ந்தேதி இரவு முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் மருந்து கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பல்க் போன்ற ஒரு சில இடங்களில் பழைய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம் என்று கால வரம்பு நிர்ணயித்தது.

அதைத்தொடர்ந்து கடந்த 10ந்தேதியுடன் வெளி இடங்களில் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பல பொதுநல வழக்குகள் மாநில உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்ச நீதி மன்றத்தில் தாக்கலாகி உள்ளன.

ரூபாய் நோட்டு வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகி வாதாடிய முன்னாள் மத்திய அமைச்சர்  கபில்சிபில் மருத்துவமனை மற்றும் சுங்கசாவடிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் பணம் எடுக்கும் உச்சவரம்பை 24000 என்பதை அதிகரித்து அறிவிக்க வேண்டும் எனவும் கபில்சிபில் வலியுறுத்தினார்.

அந்த மனுமீது இன்று தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்றம்,  செல்லாத நோட்டுகளை பயன்படுத்த கால அவகாசம் நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும்  ரூபாய் நோட்டு விவகார வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ரூபாய் நோட்டு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க உயர்நீதிமன்றங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து 6 வாரத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

ரூபாய் விவகாரத்தில், மத்திய அரசின் கொள்கை தொடர்பான முடிவுகளில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் வழக்கு தொடர்பாக நீதிபதிகள் 9 கேள்விகளை உருவாக்கியுள்ளனர். இந்த 9 கேள்விகளையும் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் கூட்டுறவு வங்கிகளில் பழைய நோட்டுகளை வாங்குவதற்கான தடை தொடர்கிறது.

கார்ட்டூன் கேலரி