தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதம் தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு: காவிரி மேலாண்மை வாரியம்

டெல்லி:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது ஆலோசனைக் கூட்டம்  இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, ஜூன், ஜூலை மாதம் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

தலைநகர் டில்லியில் உள்ள சேவா பவனில் தலைவர் மசூத் உசேன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்கள் சார்பில் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய தமிழக அரசு அதிகாரிகள், ‘கர்நாடகா அரசு தண்ணீர் வழங்காததாலும், நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 21-ல் மேட்டூர் அணையை திறக்க விவசாயத்துக்கு இயலவில்லை.

ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. நீரையும் கர்நாடக அரசு இன்னும் முழுமையாக வழங்க வில்லை. ஜூன், ஜூலையை தொடர்ந்து வரும் மாதங்களுக்கான நீரையும் சேர்த்து 31.24 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்’ என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

காவிரி படுகையில் கட்டுமானங்களை மேற்கொள்ள கர்நாடகாவுக்கு ஆணையம் அனுமதி தரக்கூடாது மேலும்,  காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைமையிடம் பெங்களூரு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால்,   இனி பெங்களூரிலேயே நடத்த வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கர்நாக அரசு,  மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்க கூறியதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இனி வரும் கூட்டங்களிலும் மேகதாது பற்றி விவாதிக்க கூடாது என சுட்டிக்காட்டியது.

இதையடுத்து, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டகாவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.  தமிழகத்து தர வேண்டிய ஜூன் மற்றும் ஜூலை மாத நீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.