கொல்கத்தா: மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே ஆக்ரோஷமாக அம்பான் புயல் கரையை கடந்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தீவிரமடைந்து அம்பான் புயலாக உருவாகியுள்ளது. முதலில் தமிழகத்தை நோக்கி வரலாம் என்று கணிக்கப்பட்டது.
பின்னர் இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்தது. புயல் வடகிழக்காக மேலும் நகர்ந்து சென்று மேற்கு வங்கத்தின் திஹா, வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும்.
அப்போது மணிக்குச் சராசரியாக 155 கி.மீ. முதல் 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். அதிகபட்சமாக 185 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
புயல் முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்கத்தில் 5 லட்சம் மக்களையும், ஒடிஷாவில் 1,58,640 மக்களையும் வெளியேற்றி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே ஆக்ரோஷமாக புயல் கரையை கடந்ததாகவும், புயல் கரையை கடந்தபோது 155 – 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.