ஞ்சை

நேற்று டெல்டா மாவட்டங்களில் சூறாவளியுடன் கூடிய மழை பெய்ததால் 500 ஏக்கர் வாழை தோப்பு நாசமாகி ஒரு விவசாயி மின்னல் தாக்கி உயிர் இழந்துள்ளார்.

நேற்று முன் தினம் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்ட தாழ்வு மண்டலம் அம்பன் புயலாக மாறி தீவிர புயலாக ஆகி வங்கக் கடல் பகுதியில் கடும் சீற்றம் ஏற்பட்டது.  நேற்று இரவு தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்தது.  தஞ்சை மாவட்டத்தில் பல பகுதிகளில் சூறாவளி மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது

தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் வயல்களில் அறுவடைக்குக் காத்திருந்த நெல் பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தது.  இந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட சிற்றூர்களில் மின் தடை ஏற்பட்டதால் பகுதியே இருளில் மூழ்கியது.  இதே நிலை புதுக்கோட்டை, ஆலங்குடி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் நேர்ந்தது.

திருச்சி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கரில் இருந்த வாழைத் தோப்பு சேதமடைந்ததால் விவசாயிகள் துயரடைந்துள்ளனர்.  விராலிமலை அருகே உள்ள ஒரு சிற்றூரில் விவசாயி ஒருவரை நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் மின்னல் தாக்கியதில் அவர் உயிர் இழந்துள்ளார்.  திருச்சி மாவட்டத்திலும் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து பாழாகி உள்ளன்.

நேற்று ராமேஸ்வரம் கடலில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றினால் பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் பகுதியில் நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகள் சேதம் அடைந்தன.  நேற்று வீசிய சூறைக்காற்றால் கன்யாகுமரி மாவட்டத்தில் பஞ்சலிங்கபுரம், நரிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான வாழைமரங்கள் அடியோடு சரிந்துள்ளன.