புபனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தை சமீபத்தில் சூறையாடிய ஃபனி புயலால், அம்மாநிலத்தின் உயிரியல் சூழல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் நிலவியல் முக்கியத்துவம் வாய்ந்த சில்கா ஏரி மற்றும் பலுகண்ட் – கோனார்க் வனவிலங்கு சரணாலயம் போன்றவை மிகுந்த மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளன.

ஆசியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரியான சில்கா ஏரியைப் பொறுத்தவரை, இதற்கு முன்பாக இருந்த 2 வாயில்கள், புயலால் 4 வாயில்களாக அதிகரித்துள்ளன. மேலும், கடல் நீர் உள்வாங்குதலால் இந்த ஏரியின் உப்புத்தன்மை அதிகரிக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இந்தப் புயலால், மொத்தம் 45 லட்சம் மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, மரம் இருந்த இடங்கள் பொட்டல் காடாக காட்சியளிக்கின்றன. மேலும், ஆயிரக்கணக்கான வீடுகளை சேதப்படுத்தியிருப்பதோடு, மின்சார சேவையையும் முடமாக்கியுள்ளது இந்தப் புயல்.

கடந்த 20 ஆண்டுகளில் ஒடிசாவைத் தாக்கிய புயல்களிலேயே இதுதான் மிகக் கடுமையான புயல் என்று கூறப்படுகிறது. முழுமையான சேத விபரங்கள் இன்னும் கணக்கிடப்படவில்லை என்றாலும், முதற்கட்டமாக மாநில அரசு, மத்திய அரசிடம் ரூ.17000 கோடி நிதியுதவியாக கேட்டுள்ளது.