கஜா புயலின் பாதிப்பு: நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக 11 அமைச்சர்கள் நியமனம்

--

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக 11 அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தையே அச்சுறுத்திய கஜாபுயல் கடந்த வியாழக்கிழமை நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்தன. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. கிட்டத்தட்ட 12ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்தன. புயலின் கோரதாண்டவத்தால் தமிழகத்தில் சுமார் 46 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

gaja

இதையடுத்து புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. பலத்த காற்றில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியும், மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளும் துரிதப்பட்டுத்தப்பட்டுள்ளன.

புயல் கரையை கடந்ததால் முற்றிலுமாக பாதிப்படைந்த நாகை மாவட்டத்தில் ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜூம், திண்டுக்கல் சீனிவாசன் தஞ்சாவூர் மாவட்டத்திலும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டனர். அதேபோல், அமைச்சர்கள் துரைக்கண்ணு, வேலுமணி, வைத்திலிங்கம் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவும், ஒருங்கிணைக்கவும் கூடுதலாக 11 அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த உத்தரவின்படி, நாகை மாவட்டத்திற்கு கே.பி. அன்பழகன், எம்.சி. சம்பத், பெஞ்சமின் ஆகியோரும், தஞ்சை மாவட்டத்திற்கு செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எம்.ஆர், விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன், பாஸ்கர் ஆகியோரை நியமித்து எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாகி திருவாரூர் மாவட்டத்தை கண்கானிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புயலால பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பால், பிஸ்கட் உள்ளிட்ட அத்யாவ்சிய பொருட்களை வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.