உருவானது பெய்ட்டி புயல் : மழையை எதிர்நோக்கும் சென்னை

சென்னை

ங்கக் கடலில் உண்டான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதால் சென்னைக்கு மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது தற்போது புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு பெய்ட்டி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெய்ட்டி புயல் இன்னும் 24 மணி நேரத்துக்குள் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் 17 ஆம் தேதி பிற்பகல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டனம் – காக்கிநாடா இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலால் ஆந்திர கடலோரப் பகுதிகளில் 16 மற்றும் 17 தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை செர்ந்த ஏனாம் மாவட்டமும் புயலால் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. அத்துடன் வடக்கு தமிழக கடலோரப்பகுதிகளான சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான அல்லது கன மழை பெய்யலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

தற்போது சென்னையின் கடலோரப்பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், பழவேற்காடு ஆகிய பகுதிகளில் பலத்த காற்றும் கடலில் பெரிய அளைகளும் எழுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. மாவட்ட நிர்வாகம் புயல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1077 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கூறி உள்ளது. பழவேற்காடு மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டோர் நிவாரண முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.