சென்னை: சென்னையில் வெள்ளத்தை தவிர்க்க உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் உதவியுடன் மழை நீர் வெளியேற்றப்படுகிறது.

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் நிவர் புயலால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. சென்னையில் 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பலத்த காற்றின் காரணமாக, சாலைகளின் பல இடங்களில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதையடுத்து, அவற்றை அகற்றுமாறு 3 சக்கரங்கள் கொண்ட நவீன இயந்திரங்களை மாநகராட்சி நிர்வாகம்  பயன்படுத்தி வருகிறது.

நகரில் தேங்கும் குப்பைகளை அகற்ற, மினி டிராக்டர்களில் பொருத்தப்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வேளச்சேரி, அடையாறு, மாம்பலம் போன்ற பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்களில் வெள்ளம் பாதித்த இடங்களில் நீரை அகற்ற உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறி இருப்பதாவது: இந்த இயந்திரங்கள், இரவு முழுவதும் பயன்படுதத்தப்பட்டு நீர் சீராக ஓட வழிவகுத்தது. அனைத்து மண்டலங்களிலும் உள்ள நீர்நிலைகளில் உள்ள அடைப்புகளை அகற்ற ரோபோட்டிக்ஸ் இயந்திரங்களை பயன்படுத்துகிறோம். அதற்கான 2 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

நகரத்தில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கழிவுநீர் அகற்றும் இயந்திரஙகளை போல இவை கிடையாது. நவீன சக்திவாய்ந்த மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களை பயன்படுத்தி 20 நிமிடங்களில் 12000 லிட்டர் தண்ணீரை வெளியேற்ற முடியும். நகரத்தில் மரங்களை வெட்டி, அகற்ற மோட்டார் பொருத்தப்பட்ட 6 இயந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

அடையார், நுங்கம்பாக்கம், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் விழுந்த 100க்கான மரங்கள் அனைத்தும், இந்த நவீன இயந்திரங்கள் மூலமாக அகற்றப்பட்டன என்று தெரிவித்தனர்.