துவாரகை, குஜராத்

குஜராத் அருகே உள்ள வாயு புயல் மீண்டும் திசை மாறி குஜராத்தில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள வாயு புயல் குஜராத் மாநிலத்தை தாக்கும் என கூறப்பட்டது. அதை ஒட்டி மாநிலம் தயார் நிலையில் இருந்தது. அந்த சமயத்தில் வாயு புயல் திசை மாறியது. அதனால் அப்புயல் குஜராத் மாநிலத்தை தாக்க வாய்ப்பில்லை என வானிலை மையம் அறிவித்தது.

ஆயினும் மாநில அரசு மீட்புப் பணியினரை தயார்நிலையில் வைத்திருப்பதை தொடர்ந்து வருகிறது. தற்போது வாயு புயல் குஜராத் மாநிலம் துவாரகா அருகே 415 கிமீ தூரத்தில் கடலில் மையம் கொண்டுள்ளது. மீண்டும் திசை மாறிய வாயு புயல் குஜராத் மாநிலத்தை நோக்கி 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

வாயு புயல் மெல்ல வலுவிழந்து குஜராத் மாநிலத்தில் நாளை கரை கடக்க உள்ளது. கரையை கடக்கும் போது வாயு புயல் மேலும் வலுவிழக்கும் என கூறப்படுகிறது. அதானல் இந்த வாயுப் புயலால் குஜராத் மாநிலத்துக்கு பெரிய பாதிப்பு இருக்காது என தற்போது வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.