பெங்களூரு: திகார் சிறையில் இருந்து டெல்லி சென்று பின்னர் பெங்களூரு திரும்பிய காங்கிரசின் டிகே சிவக்குமாருக்கு 20 அடி உயர ஆப்பிள் மாலை, மேளதாளம் என தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவர் டி.கே.சிவக்குமார். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை அவரை கைது செய்தது. பின்னர் திகார் சிறையில் அடைத்தது.

அந்த வழக்கில் அவரது ஜாமீன் மனுவை, சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. அதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதன்பிறகு, கடந்த 23ம் தேதி சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம்.

50 நாள் சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் விடுதலையான அவர், டெல்லி சென்று, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு போனார். அங்கு கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார்.

பின்னர் பெங்களூரு திரும்பினார். சொந்த ஊர் வந்த அவருக்கு தொண்டர்கள், ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களின் வித்தியாசமான வரவேற்பு நடவடிக்கைகளால், பெங்களூரு நகரின் பல பகுதிகள் முடங்கின. தேவனஹள்ளி சுங்கக்சாவடி முன்பு திரண்ட ஆயிரக் கணக்கான தொண்டர்கள் முழக்கமிட்டு வரவேற்றனர்.

பெங்களூரு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. காங்கிரஸ் தொண்டர்களும் அவரது ஆதரவாளர்களும், பெருமளவில் திரண்டிருந்தனர்.

 

நடன கலைஞர்கள், மேள தாளங்கள் என பெங்களூரு விமான நிலைய பகுதியே அதகளமாகி போனது. சிவக்குமாரின் முகமூடி அணிந்து, கொடிகளுடன் திரண்டு வந்த ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிலும் குறிப்பாக தொண்டர்கள் எடுத்து வந்த 20 அடி உயரம் கொண்ட ஆப்பிள் மாலை அனைவரையும் கவர்ந்தது. 100 கிலோ எடை கொண்ட அந்த ஆப்பிள் மாலை, டிரக் லாரியில் கொண்டு வரப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் தொண்டர்களின் உற்சாகத்தை.

அதன் பிறகு, கிரேன் கருவி உதவியுடன் அந்த ஆப்பிள் மாலையை சிவக்குமாருக்கு அணிவித்து, தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அந்த டிரக் லாரியையும், ஆதரவாளர்கள் விடவில்லை. மலர்களால் அலங்கரித்து தள்ளிவிட்டனர்.