டெல்லி: தபோல்கர் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை அரபிக்கடலில் இருந்து சிபிஐ கண்டுபிடித்துள்ளது.

2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், புனேவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் பகுத்தறிவாளரும், சமூக ஆர்வலருமான நரேந்திர தபோல்கர். இந்த சம்வவத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந் நிலையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கியை சிபிஐ கண்டுபிடித்திருக்கிறது. நார்வேயை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் உதவியுடன், தொழில்நுட்பத்தின் பின்னணியிலும் துப்பாக்கியை மீட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறினர்.

இந்த துப்பாக்கி தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்படுகிறது. அதன்பிறகு தான் தபோல்கர் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா, இல்லையா என்பது தெரியவரும்.

பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் இந்த துப்பாக்கியை கண்டுபிடித்து இருக்கிறோம். தபோல்கரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள துப்பாக்கிக் குண்டின் அளவு, அது எந்த ரகம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் வீரேந்திர ததே, வழக்கறிஞர் சஞ்சீவ் புனாலேகர், விக்ரம் பாவே, ஷரத் கலாஸ்கர் மற்றும் சச்சின் அண்டூர் உள்ளிட்ட 7 பேர் தபோல்கர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சிபிஐ பெயரிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.