வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜோ பிடன் ஆதரவாளர்களின் வெற்றி கொண்டாட்டத்தில் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் முடிவுகளில் ஜோ பிடன் 290 இடங்களை கைப்பற்றி அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக, இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

தேர்தலில் பிடன், கமலா ஹாரிஸ் வெற்றியை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வெற்றி கொண்டாட்டங்கள் களைகட்டின.

அப்போது, திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்த மார்க்கஸ் டெமோன் பேட்டர்சன் என்ற 31 வயது நபர் படுகாயமடைந்தார். இதுபற்றி பேசிய போலீசார், காயம்பட்ட நபர் மருத்துவமனை கொண்டு சென்று சேர்க்கப்பட்டதாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.

சம்பவ பகுதியில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.