சென்னை

சென்னை நகருக்கு டிசம்பர் வரை தினமும் 60 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறி உள்ளார்.

சென்னை குடிநீர் வாரிய கூட்ட அரங்கில் அதிகாரிகள் கலந்துக் கொண்ட ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.    நகரின் குடிநீர் வினியோகம்,  டெங்கு உட்பட பல தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.   இந்த கூட்டத்துக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமை வகித்து உரை ஆற்றினார்.

அமைச்சர் வேலுமணி, “வரும் கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி நகருக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.   இதற்காக மின் மோட்டார்கள் பழுதின்றி வைட்திருக்க வேண்டும்.   சென்னையை சுற்றி உள்ள புழல், சோழவரம், பூண்டி  மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் தற்போது 4.24 குடி நீர் உள்ளது.   அத்துடன் ஜூலையில் இருந்து 4 மாதங்கள் நமக்கு வர வேண்டிய கிருஷ்ணா நதி நீரைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   அது தவிர அக்டோபர் முதல் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மாநகருக்கு தற்போது 65 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.    பருவமழை குறைந்தாலும் டிசம்பர் வரை சென்னை மாநகருக்கு தினம் 60 கோடி லிட்டர் குடிநீர் தடையின்றி வழங்கப்படும்.   அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.   ஏரிகளின் ஓரத்தில் சக்தி வாய்ந்த மோட்டார்களை பொருத்தி குடிநீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   இரட்டை ஏரி மற்றும் போரூர் ஏரியின் நீரும் குடிநீராக சுத்தீகரிப்பு செய்து உபயோகிக்கப் பட உள்ளது.” என கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.