ராமர் கோயில் கட்டுவதற்கு தினமும் ரூ. 50 லட்சம் நன்கொடை குவிகிறது..

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர  அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது.

அயோத்தியில் அறக்கட்டளையின் தலைமையகம் அமைந்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடந்த பிறகு, கோயிலைக் கட்டுவதற்குத் தினமும் நன்கொடை குவிந்து வருகிறது.

நாடு முழுவதும் உள்ள ராம பக்தர்கள், ஆன்லைன் மூலமாக, அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய வண்ணம் உள்ளனர்.

அயோத்திக்கு வருவோர், நேரில் அறக்கட்டளை தலைமை அலுவலகத்தில் ரொக்கமாகப் பணம் கொடுத்து வருகிறார்கள்.

இது தவிர மணியார்டர் மற்றும் காசோலைகளும் அயோத்தியில் உள்ள அறக்கட்டளைக்கு வந்து குவிகின்றன.

கோயில் கட்டுவதற்கு 500 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 60 கோடி ரூபாய் நிதி சேர்ந்துள்ளது.

கோயில் பூமி பூஜை நடந்த 5 ஆம் தேதி முதல் சராசரியாக தினமும் 50 லட்சம் ரூபாய் நன்கொடை வந்து கொண்டிருப்பதாக அறக்கட்டளை தலைமையக அலுவலக பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

அதிக பட்சமாக மொராரியா என்ற தனி நபர் 11 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

அயோத்திக்கு சாமி கும்பிட வந்த பக்தர் ஒருவர், பக்கத்தில் இருந்த அறக்கட்டளை ஆபீசுக்கு சென்று 11 லட்சம் ரூபாய் ‘ஹாட் ஹேஷ்’ வழங்கி விட்டு சென்றுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், தாங்கள் எப்படி கோயில், நன்கொடையை வழங்குவது என்று கேட்ட வண்ணம் உள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து பணம் பெற மத்திய  அரசிடம் இருந்து முறையான அனுமதி கிடைக்காததால் ’’காத்திருங்கள்.. அவசரப்படவேண்டாம்’’ என அவர்கள் கோயில் நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

-பா.பாரதி.