கழிப்பறையில் தனிமை கூலித்தொழிலாளிக்கு கொடுமை ..

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே உள்ள சரஸ்வதிபூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கலியா பந்தானி.

அருகே உள்ள கிராமத்துக்குக் கூலி வேலை பார்ப்பதற்காகச்  சென்றிருந்த பந்தானி, சில நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார்.

உள்ளே விடக் கிராமத்தினர் மறுத்து விட்டார்கள்.

இத்தனைக்கும் அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை.

‘ வெளியூர் சென்று விட்டு வந்திருப்பதால் 14 நாள் உன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று ஊர் நாட்டாமை ஆணையிட்டார்.

பந்தானி வசிப்பது ஒரே அறை மட்டும் உள்ள சின்ன குடிசை வீடு. அதில் ஏற்கனவே 12 பேர் உள்ளனர்.

என்ன செய்வது?

அந்த ஊரில் ஒதுக்குப்புறமாக, யாரும் பயன்படுத்தாத கழிப்பறை ஒன்று உள்ளது.

அதில் தங்குமாறு ‘ அட்வைஸ்’ செய்தது, ஊர் பஞ்சாயத்து.

வேறு வழியின்றி அந்த கழிப்பறையிலேயே வாசம் செய்தார், பந்தானி.

அந்த கழிப்பறை சுவரில், ‘’ இங்கே வசிப்பவர் தனிமை படுத்தப்பட்டுள்ளார்’’ என்று ‘ஸ்டிக்கர்’ எல்லாம் ஒட்டி எச்சரிக்கை வேறு செய்யப்பட்டிருந்தது.

 3 நாட்களுக்குப் பிறகு, ’தனிமைப்படுத்தும்’ முகாமாக மாற்றப்பட்டிருந்த பள்ளிக்கூடத்துக்கு, ‘ஷிப்ட்’ செய்யப்பட்டார், அந்த கூலி.

– ஏழுமலை வெங்கடேசன்