சென்னை:

நீட் தேர்வு விரக்தியால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. இதில் திரைப்பட இயக்குனர் அமீர் பேசுகையில், ‘‘நாம் அல்லாம் சாதி மதங்களை கடந்து தமிழனதாக சமத்துவமாக இருக்கிறோம்’’ என்றார்.

அப்போது பார்வையாளர் வரிசையில் இருந்த ‘கபாலி’ பட இயக்குனர் பா.ரஞ்சித் திடீரென மைக்கை வாங்கி, ‘‘ இங்கு சமத்துவம் இல்லை. ஒவ்வொரு ஊரிலும் சாதிகள் உள்ளது. சாதியை ஒழிக்காதவரை தேசியம் ஒரு காணல் நீர்’’ என்று பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தலித் தொடர்பாக சில கருத்துக்களையும் தெரிவித்தார். இந்நிலையில் இது சமூக வளைதளங்களில் பரவி பெரும் விவாத பொருளாக மாறிவிட்டது.

இந்நிலையில் நடிகர் எஸ்வி சேகர் டுவிட்டரில், ‘‘தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித். தன் ஜாதியை பெருமையாக சொல்லும் ரஞ்சித்திற்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்’’ என நேற்று தெரிவித்திருந்தார்.

இதற்கு ரஞ்சித் அளித்துள்ள பதில் பதிவில், ‘‘தலித் என்பது சாதியல்ல, ஆரியம்&சாதியம் ஒழிக்கும் விடுதலை கருத்தியல்’’ என்று தெரிவித்துள்ளார்.