லக்னோ:

உத்தரபிரதேச பாஜக அமைச்சர் ஒருவர் தலித் வீட்டில் சாப்பிட்டதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. அதிக அளவில் வைரலான இந்த புகைப்படத்திற்கு எதிரான விமர்சனங்களும் குவிந்தன. இது குறித்து விசாரணை செய்ததில் ஓட்டல் உணவை வாங்கி வந்து தலித் வீட்டில் வைத்து அமைச்சர் சாப்பிட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விபரம்…

உத்தரபிரதேச மாநிலம் லோகாகர் கிராமத்தை சேர்ந்தவர் ரஜ்னீஸ்குமார். (வயது 35). தலித் சமூகத்தை சேர்ந்தவர். அமைச்சர் இவரது வீட்டில் சாப்பிட்டது குறித்து கூறுகையில், ‘‘ எனது குடும்பத்தினர் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததால் கடந்த 2ம் தேதி இரவு அங்குள்ள ஒரு கடையில் சாப்பிட்டுவிட்டு இரவு 11 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்தேன். வெளியில் ஒரு கும்பல் நின்றது. உனது வீட்டில் அமைச்சர் சாப்பிட வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஆனால் அவருக்கு உணவு எதுவும் வீட்டில் சமைக்கவில்லை. இதனால் நான் தவித்து கொண்டிருந்த நேரத்தில் அங்கு மாநில கரும்பு வளர்ச்சி துறை அமைச்சர் சுரேஷ் ரானா வந்தார். உடனடியாக அவருடன் வந்தவர்கள் அவர் சாப்பிட தட்டு, மினரல் வாட்டர் பாட்டில் ஆகியவற்றை தயாராக எடுத்து வந்திருந்தனர். தனியார் கேட்டரிங் சர்வீஸ் மூலம் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதை எனது வீட்டில் வைத்து அமைச்சர் சாப்பிட்டார். நான் அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவில்லை’’ என்றார்.

இது குறித்து அமைச்சர் கூறுகையில், ‘‘நான் ஓட்டலில் இருந்து உணவை எடுத்து வந்தது சாப்பிட்டதாக கூறுவது தவறு. அதற்கு முதல் நாள் கூட காலை உணவு ஒரு தலித் வீட்டில் சாப்பிட்டேன்’’என்று தெரிவித்துள்ளார்.