ஐகிளாஸ்:

உ.பி. தேர்தலில் போட்டியிடும் ஒரு பாஜ தலித் வேட்பாளர் வீடுகளில் தரையில் அமர்ந்தும், உயர் வகுப்பு வீடுகளுக்கு செல்லும் போது தனியாக டம்ளர் எடுத்து சென்று டீ குடிக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்.

டெல்லியில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள ஐகிளாஸ் என்ற சட்டமன்ற தொகுதி. இது தனி தொகுதியாகும். உபி மாநிலத்தை சேர்ந்த இந்த தொகுதியில் பாஜ சார்பில் ராஜ்வீர் திலேர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். தலித் இனங்களில் மிகவும் கீழ்நிலையானதாக கருதப்படும் வால்மீகி இனத்தை சேர்ந்தவர் இவர்.

இந்த தொகுதியில் ஜாட் இனத்தவர் அதிகம். வெற்றியை நிர்ணயம் செய்வது இவர்களின் 90 ஆயிரம் ஓட்டுக்கள். அதனால் உயர்வகுப்பை சேர்ந்த இவர்களுக்கு ராஜ்வீர் திலேர் மிகவும் மரியாதை கொடுத்து வருகிறார். அவர்களுக்கு முன்னாள் நாற்காலியில் உட்காராமல் தரையில் உட்காருகிறார். எங்கு சென்றாலும் உடன் டம்ளர் ஒன்றை எடுத்துச் செல்கிறார்.

உயர் வகுப்பினர் வீடுகளுக்கு செல்லும் போது இந்த டம்ளரில் டீ வாங்கி குடிக்கும் பழக்கத்தை கையாண்டு வருகிறார். உயர்வகுப்பை சேர்ந்தவர்கள் வேறு டம்ளரில் டீ கொடுத்தால் வாங்க மறுக்கிறார்.

மேலும், 40 வயதாகும் அவர் தன்னை விட இளையவரான ஜாட் மோகன் சிங் என்பவரது கால்களில் விழுந்து ஓட்டு கேட்பதை காணமுடிகறிது. ‘என் மீதுள்ள தவறுகளை தயவு செய்து கூறுங்கள். என் மீது கோபம் இருந்தால் எம்எல்ஏ.வாக இருப்பதை விட காவலாளியாக இருக்கிறேன்’’ என்று கெஞ்சி ஓட்டு கேட்கிறார்.

மோகன் சிங் கையில் 4 ஆயிரத்து 500 ஜாட் ஓட்டுக்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி சார்பில் தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். இவரது நடவடிக்கையால் அனைத்து ஜாதினருக்கும் ராஜ்வீர் திலேரை பிடிக்கும். எனினும் ஜாட் இனத்தவர் இந்த முறை அஜீத் சிங்க்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘இது எங்களது குல வழக்கம். நான் ஒரு வால்மீகியின் மகன். உலகமே மாறினாலும் எங்களது பாரம்பரியத்தை நான் உடைக்க முடியாது. ஒவ்வொரு செயல்பாட்டிலும் இதை நாங்கள் பின்பற்ற வேண்டும்’’ என்றார்.

இவரது ஜீப்பில் கூட டிரைவருக்கு அருகில் உள்ள நெருக்கடியான சீட்டில் தான் உட்காருவார். சொகுசான பின் சீட்டில் இவரது ஆதரவாளரான பிராமன இனத்தை சேர்ந்த ஜெகதீஷ் பிரசாத், ஜாட் இனத்தை சேர்ந்த ராபின் சவுத்ரி ஆகியோர் உட்காருவார்கள்.

அதற்கு பின்னால் வால்மீகி இனத்தை சேர்ந்த முகேஷ்குமார், அமீத் ஆகியோர் இருப்பார்கள். இதன் மூலம் உபி.யில் ஜாதி ஆதிக்கம் எந்தளவுக்கு புரையோடி போய் கிடக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.