ஆதித்யாநாத்துக்கு 16 அடி நீள சோப் அனுப்ப திட்டமிட்டுள்ள தலித் அமைப்பு

கமதாபாத்

குஜராத்தை சேர்ந்த தலித் அமைப்பு ஒன்று  உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாவுக்கு 16 அடி நீள சோப் ஒன்றை அனுப்ப தீர்மானித்துள்ளது.

 

சில நாட்களுக்கு முன்பு உ.பி. மாநிலத்தில் உள்ள  குஷிநகரை சேர்ந்த தலித் மக்களை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு முன்பாக, அந்த தலித் மக்களுக்கு  சோப் மற்றும் ஷாம்பூ அளித்து சுத்தமாக வரும்படி  அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,  குஜராத்தை சேர்ந்த “டாக்டர் அம்பேத்கர் வெசன் பிரதிபந்த் சமிதி” என்ற தலித் அமப்பு,  ஆதித்யாநாத்துக்கு  16 அடி நீளமான சோப்பை அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பை சேர்ந்த கிரிட் ராதோட், மற்றும் காந்திலால் பர்மார் ஆகியோர் தெரிவித்ததாவது:

“இந்த சோப்பானது பொதுமக்கள் பார்வைக்கு ஜுன் 9ந்தேதி நடைபெறும் விழாவில் வைக்கப்படும். பிறகு அது பேக் செய்யப்பட்டு லக்னோவிலுள்ள ஆதித்யநாத்துக்கு அனுப்பபடும்.

தலித் மக்களிலேயே மிகவும் தாழ்த்தப்பட்டவர் என கருதப்படும் பால்மிகி என்ற இனத்தை சேர்ந்த பெண்ணைக் கொண்டு இந்த சோப் செய்யப்படும்” என்று தெரிவித்தனர்.

மேலும் இவர்கள், “விரைவில் தலித் இனத்தை சேர்ந்த அனைத்து சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பிஜேபி ஆட்சிக்கு வந்தபின் தலித்துகளுக்கு நடத்தப்படும் கொடுமைகளைக் கண்டு மௌனமாக இருப்பது ஏனென்று கேள்வி எழுப்பவும் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினர்.

எதற்காக 16 அடி நீளத்தில் செய்யப்படுகிறது என்பதை சொல்ல மறுத்து விட்டனர்.