க்னோ

க்னோ பல்கலைக்கழக தலித் மாணவர் ஒருவர் ஜனாதிபதி கையால் தங்கப் பதக்கம் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

பா ஜ க ஆளும் உத்திரப் பிரதேசத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கார் பல்கலைக் கழகமும் ஒன்றாகும்.   வரும் 15ஆம் தேதி அன்று இந்தப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.   அந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துக் கொண்டு பட்டங்களும்,   அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் வழங்க உள்ளார்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் எம் சி ஏ படிப்பில் பல்கலைக் கழகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ள மாணவர் ராமேந்திர நரேஷ்.   இவர் தலித் வகுப்பை சேர்ந்தவர்.   இவர் உத்திரப்பிரதேசம் மற்றும் நாடெங்கும் தலித்துக்களுக்கு எதிராக வன்முறை நடைபெறுவதால் ஜனாதிபதியிடம் இருந்து தங்கப் பதக்கம் பெற மறுப்பு தெரிவித்துள்ளார்.

ராமேந்திர நரேஷ், “தலித் மாணவர்களை பல்கலை ஆசிரியர்கள் கீழ்த்தரமாக நடத்துவது என் மனதைப் புண் படுத்தி உள்ளது.  நாடெங்கும் தலித் என்றாலே கேவலமாக நடத்தப்படுவதை என்னால் பொறுக்க முடியவில்லை.   பலவித தாக்குதல்களுக்கும் தலித் மக்கள் ஆளாக்கப்படுகின்றனர்.

தலித் மக்களைக் கொடுமைப்படுத்துவதற்காக எனது எதிர்ப்பைக் கட்டவே நான் ஜனாதிபதியிடம் இருந்து தங்கப் பதக்கம் வாங்க மறுத்துள்ளேன்.    இது எனது சகோதரர்களுக்கு நான் செய்யும் ஒரு கடமையே ஆகும்.   பிரதமரும்,  ஜனாதிபதியும் தலித்துக்கள் சமமாக நடத்தப்படுவார்கள் என உறுதி அளித்தால் நான் எனது முடிவை மறு பரிசீலனை செய்ய தயாராக உள்ளேன்.” எனக் கூறி உள்ளார்.