தலித் சமுதாய அங்கன்வாடி பெண் ஊழியர்களை இடமாற்றம் செய்த மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ்

மதுரை:

தலித் சமுதாயத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களை இடமாற்றம் செய்த மதுரை ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.


மதுரை மாவட்டம் வலையப்ப்பட்டி அங்கன்வாடி மையத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சமையலர் மற்றம் உதவியாளரை மதுரை ஆட்சியர் பணி இடமாற்றம் செய்திருந்தார்.

தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 2 பெண்களையும் இடமாற்றம் செய்ய கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

இது தொடர்பான பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில்,தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றது.

கிராம மக்கள் கொடுத்த நெருக்கடிக்கு பணிந்து 2 பெண் ஊழியர்களையும் பணி இடமாற்றம் செய்தது குறித்து, ஜுலை 17-ம் தேதிக்குள் விளக்கமளிக்க மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

மேலும், மனித உரிமையை மீறி இருவரையும் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? நடவடிக்கை எடுத்திருந்தால் எத்தகைய நடவடிக்கை என விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் மதுரை ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Madurai Collector, மதுரை ஆட்சியர்
-=-