மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் ஆடாமலேயே, இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றது குறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் டேன் வான் சொன்னக் கருத்து விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி, மழை காரணமாக முற்றிலும் ரத்துசெய்யப்பட்டு, புள்ளிகள் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதேசமயம், மற்றொரு அரையிறுதியில், மழை காரணமாக, டக்வொர்த் லீவிஸ் முறையில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது தென்னாப்பிரிக்கா. இதனையடுத்து கருத்து தெரிவித்த அந்த அணியின் கேப்டன் டேன் வான், “இறுதிப் போட்டிக்கு இலவச அனுமதி கிடைத்து தகுதிபெறுவதற்கு பதில், தோற்பதே மேல்” என்று கூறியிருந்தார்.

அவர், இந்திய அணியை மனதில் வைத்தே இதைக் கூறினார் என்று பலரும் குறிப்பிட்டனர். அதேசமயம், இந்திய அணியைக் குறிப்பிட்டு அவர் பேசவில்லை என்றும் சிலர் ஆதரவு தெரிவிக்கின்றன. கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லேவும் இதற்கான விளக்கத்தை அளித்திருந்தார்.

ஆனாலும், தென்னாப்பிரிக்க கேப்டனின் கருத்து குறித்தான விமர்சனமும் விவாதமும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. அவரே, நேரடியாக இதற்கு விளக்கம் அளித்தால்தான் உண்டு!