ஐயப்ப பக்தர்களுக்கு ஐ எஸ் தீவிரவாதிகளால் ஆபத்தா? : அதிர்ச்சி தகவல்

திருச்சூர்

பரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படலாம் என புலனாய்வுத் தகவல் கூறுகிறது.

வருடா வருடம் மண்டல பூஜை நேரத்தில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் குவிவது வழக்கம்.  இந்த வருடமும் அது போல பக்தர்கள் சென்று வருகின்றனர்.  தமிழ்நாடு, கேரளா மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப தரிசனத்துக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வருவதாக கூறப்படும் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பு ஐயப்ப பக்தர்களை குறி வைத்துள்ளதாக புலனாய்வுத்துறை திருச்சூர் போலீஸுக்கு தகவர்ல் அனுப்பியுள்ளது.  இதை ஒட்டி திருச்சூர் போலீஸ் ரெயில் நிலைய மேலாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.  இந்தக் கடிதம் பற்றி கேரள மாநில போலீஸ் இயக்குனர் ஜெனரல் பத்திரிகையாளரிடம் தெரிவித்துள்ளார்.

அவர், “ஐ எஸ் பயங்கரவாதிகள் ஐயப்ப பக்தர்களுக்கு ஆபத்து விளைவிக்கலாம் என புலனாய்வுத் துறை ஒரு தகவல் அனுப்பியது.  அதனால் ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்யும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர் ஆகியவைகளை கடுமையாக பரிசோதிக்குமாறு வலியுறுத்தி உள்ளோம்.  வருடா வருடம் வழக்கமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்குவதைப் போலவே இந்த வருடமும் வழங்கி வருகிறோம்.  பக்தர்கள் யாரும் பயப்படத் தேவை இல்லை.  இதையொட்டி சமூக ஊடகங்கள் கிளப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என கூறினார்.