வட சென்னைக்கு ஆபத்து! கமல் டுவிட்

சென்னை,

சென்னை அருகே உள்ள  எண்ணூர் கழிமுகத்தை உதாசீனப்படுத்தினால் வடசென்னைக்கு ஆபத்து ஏற்படும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வரும் நடிகர் கமலஹாசன் அவரது பிறந்தநாளான வரும் நவம்பர் 7ந்தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக கூறி உள்ளார்.

இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், வடசென்னைக்கு ஏற்படும் ஆபத்து குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விரிவாக பதிவிட்டுள்ளார்.

அதில், கொசஸ்தலாயாற்று பிரச்சனை பற்றி நான் எழுதியது முழுவதுமாக வந்து சேரவில்லை என்ற புகார்கள் வந்தன. மன்னிக்க. முழுவதும் இக்கீச்சில் இணைத்துள்ளேன்
கொசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாராமாக உள்ளது. அது கூவம் அடையாற்றைவிட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1,090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம்.

வல்லூர் மின் நிலையமும், வட சென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலை ஆற்றில் கொட்டுக்கின்றன. இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாக போராடியும், அரசு பாராமுகமாய் உள்ளது. மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்ப முற்பட்டதும் செவிடர் காதில் ஊதிய சங்குதான்.

பற்றாக்குறைக்கு இந்துஸ்தான் பெட்ரோலியமும், பாரத் பெட்ரோலியமும் தங்கள் எண்ணை முனையங்களை நட்டாற்றில் கட்டியிருக்கின்றன. காமராஜர் துறைமுகத்தை விரிவுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் கொசஸ்தலையின் கழிமுகத்தின் 1,000 ஏக்கர் நிலத்தை சுருட்டும் வேலையும் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

நில வியாபாரிகளுக்கு கொடுக்கும் முன்னுரிமையும், உதவியையும் ஏழை மக்களுக்கு கொடுக்காத எந்த அரசும் நல் ஆற்றைப் புறக்கணிக்கும் உதவாக்கரைகள்தான்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

You may have missed