கவர்னர் மாளிகை :  மான்களுக்கு ஆபத்து

 சென்னை

சென்னை ஆளுனர் மாளிகையில் உள்ள போலோ விளையாட்டரங்கை செயல் படுத்துவதில் மாளிகை உத்தரவுக்கும், வனத்துறை உத்தரவுக்கும் இடையே சிக்கி அதிகாரிகள் குழம்புகின்றனர்

சென்னையில் ராஜ்பவன் என அழைக்கப்படும் ஆளுநர் மாளிகை கடந்த ஏப்ரல் முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.   அத்துடன் மாளிகை வளாகத்தில் பொது நிகழ்வுகள் நடத்தவும் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மாளிகை வளாகத்தில் ஒரு பெரிய போலோ விளையாட்டரங்கம் உள்ளது.   அது செயல்படுத்தப்பட்டால் பொலோ விளையாடுபவர்களுக்கு ஒரு பெரிய மைதானம் அமையும் என்னும் நோக்கில் அதனை சீர்செய்ய மாளிகை நிர்வாகம் உத்தரவிட்டது.  ஆனால் அந்த மைதானம் தற்போது மான்கள் வசிக்க, மற்றும் அங்குள்ள புற்களை மேய வனத்துறையால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

போலோ மைதானம் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.   சுற்றிலும், அடர்ந்த காடு போன்ற  புதர்கள் நிறைந்த பகுதி.   இங்கு  பல அரியவகை மரங்கள் உள்ளன.  மேலும் சுமார் 500 மான்கள் வசிக்கின்றன.  முள்ளம்பன்றிகள், நரிகள் போன்ற விலங்குகளும்,  பலவகை பறவைகளுக்கும் இந்த புதர்க்காடு புகலிடம் அளித்துள்ளது.

அந்த மைதானத்தை வனத்துறை பாதுகாக்கப் பட்ட இடம் எனவும்,  வனவிலங்குகள் பாதுகாப்புத் துறை மான்களுக்கு சரணாலயம் எனவும் அறிவித்துள்ளது.

இந்த மைதானம் மாளிகையினுள் இருப்பதால் மாளிகை நிர்வாகத்தின் சொற்படி போலோ விளையாட்டரங்கமாக செயல் படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.

இதனால், “அந்த பகுதியில் இருக்கும் மான்கள் உட்பட விலங்கினங்களுக்கு ஆபத்து ஏற்படும். அவை  வாழ வழியில்லாமல் போகும். ஆகவே அந்த மைதானத்தை போலோ விளையாட்டு மைதானமாக்கும் முயற்சியை ராஜ்பவன் கைவிட வேண்டும்” என்று விலங்குகள் நல ஆர்வலர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  வலியுறுத்துகிறார்கள்.

 

 

கார்ட்டூன் கேலரி