கராச்சி: ஐசிசி தலைவராக கங்குலி தேர்வானால், தனது மீதான வாழ்நாள் தடையை நீக்கக்கோரி மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூறியுள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா.

சூதாட்டப் புகார் தொடர்பாக, இவர் மீது வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற இரண்டாவது இந்து வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி தேர்வாகலாம் என்று கூறப்படும் நிலையில், இவர் கூறியுள்ளதாவது, “கிரிக்கெட் வீரரான கங்குலிக்கு, கிரிக்கெட் மற்றும் வீரர்களின் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பது தெளிவாக தெரியும் என்பதால், இவர் ஐசிசி தலைவராக நியமனம் செய்யப்படுவதை விரும்புகிறேன்.

இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியது மட்டுமல்ல, பெங்கால் கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐ அமைப்பையும் நன்றாக வழிநடத்தி வருகிறார் கங்குலி. எனவே, ஐசிசி தலைவர் பதவிக்கு இவர் பொருத்தமானவர் என்று நம்புகிறேன்.

இவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும்கூட, பிற நாடுகளின் வாரியங்கள் கட்டாயம் ஆதரிக்கும் என்று நம்புகிறேன். இவர் அப்பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டால், நான் எனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கக்கோரி மேல்முறையீடு செய்வேன். ஐசிசி என் கிரிக்கெட் வாழ்விற்கு உதவும் என்று நம்புகிறேன்” என்றார் கனேரியா.