சத்தீஸ்கர்: செய்தியாளர்களை கொல்லும் நோக்கமில்லை! :  நக்சலைட்டுகள் கடிதம்

--

தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாஹூ கொல்லப்பட்டு மூன்று நாட்கள் கடந்த நிலையில், அவரது மரணம் தவறுதலாக நடந்துவிட்டதாகவும் செய்தியாளர்களைக்க கொல்லும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும்  நக்சலைட்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் சமீபத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாஹூ மற்றும் காவல்துறையினர் இருவர்  கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுதும்  அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாஹூ மரணம் தவறுதலாக நடந்துவிட்டதாக நக்சலைட்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அதில், “நாங்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது  டிடி செய்தி குழுவினர் காவல்துறையினரின் பைக்கில் வந்துள்ளார்கள். அவர்கள் செய்தியாளர்கள் என்பதை மறந்துவிட்டோம். நாங்கள் நடத்திய தாக்குதலில் அச்சுதானந்த் சாஹூ உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரை குறி வைத்து நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. பத்திரிகையாளர்கள் எங்களது எதிரிகள் அல்ல. அவர்கள் எங்கள் நண்பர்கள். அவர்களை நாங்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் தாக்க மாட்டோம். எங்களது இடங்களுக்குள் பத்திரிகையாளர்கள் வரும் போது பாதுகாப்பு படையினருடன் வரவேண்டாம் என்று பத்திரிகையாளர்களை கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.