டார்ஜிலிங்,

சுற்றுலா பிரதேசமான டார்ஜிலிங்கில் நடைபெற்று வரும் தனி மாநில போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறையில் போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு 3 பேர் பலியாகினர்.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், இந்த பிரச்சினையில் வெளி நாடு சதி உள்ளதாகவும், தான் உயிரை வேனாலும் விடுவேனே தவிர மாநிலத்தை பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார்.

மேற்கு வங்கத்திலுள்ள டார்ஜிலிங் மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கிய கோர்க்காலாந்து என்னும் தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரி கூர்க்கா இனத்தவர்கள்  போராடி வருகின்றனர்.

கூர்க்கா  ஜனமுக்தி மோர்ச்சா என்ற கட்சியை பிமல் குருங் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு நிறுவினார்.  இந்த கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிமல் குருங் மற்றும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவின் முன்னணித் தலைவர்களின் வீடுகளில் போலீஸார் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் இருந்து  ஆயுதங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன இதையடுத்து அக்கட்சி சார்பில் பந்த் நடத்தப்பட்டது.

பந்தின்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே  மோதல் வெடித்தது.

இதில் போராட்டக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார். இதையடுத்து போலீசார் துப்பாகி சூடு நடத்தினர். இதில் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் 2 பேர் பலியாகினர். இதன் காரணமாக டார்ஜிலிங் பதற்றமாக காணப்படுகிறது.

இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

டார்ஜீலிங்கில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் முழுக்க முழுக்க திட்டமிட்ட சதியாகும். இந்த வன்முறையின் பின்னணியில் சில பயங்கரவாத அமைப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

பயங்கரவாதிகளால் மட்டுமே இத்தகைய வன்முறைகளை நிகழ்த்த முடியும். கூர்க்கா  ஜனமுக்தி மோர்ச்சாவுக்கும் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் சில தீவிரவாதக் குழுக்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.

மேலும், இந்த வன்முறையின் பின்னணியில் சில வெளிநாடுகளும் உள்ளன

ஒரே நாளில் இத்தனை ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் அவர்களால் குவித்துவிட முடியாது. நீண்ட காலமாக, அவை சேகரிக்கப்பட்டு வந்துள்ளன.

மலைப் பகுதி என்பதாலும், சில மாநிலங்கள் மற்றும் நாடுகளின் எல்லையையொட்டி இருப்பதாலும் டார்ஜீலிங் வழியாக ஆயுதங்கள் கடத்தப்படுகின்றன

நான் எனது உயிரை விட்டாலும் விடுவேனே தவிர, மேற்கு வங்கத்தைப் பிரிக்க ஒருக்காலும் ஒப்புக் கொள்ளமாட்டேன்.

டார்ஜீலிங் மலைப்பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறேன்.

இந்தப் பிரச்னையில் மத்திய அரசு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இனி மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கௌதம் தேவும், பொதுப் பணித் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸும் டார்ஜீலிங் மலைப்பகுதியை கவனித்துக் கொள்வார்கள் என்றார் மம்தா பானர்ஜி.

மலைப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து விவாதிப்பதற்காக மேற்கு வங்க அரசு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

சிலிகுரியில் வரும் வியாழக்கிழமை (ஜூன் 22) இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு டார்ஜீலிங் வன்முறை குறித்து கேட்டறிந்தார்