லாகூர்:

கடந்த 20 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் பாகிஸ்தானில் ஒரு இந்து அரசியல்வாதி அமை ச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

பாகிஸ்தானில் புதிய பிரதமராக பதவி ஏற்ற ஷாகித் கான் அப்பாஸி அமைச்சரவையில் அவர் இடம்பெறுவது குறித்து முடிவு செய்யப்பட்டது. 65 வயதாகும் தர்ஷன் லால் பாகிஸ்தானின் நான்கு மாகானங்களை ஒருங்கிணைக்கும் பணிக்கு அவர் தலைமை தாங்கவுள்ளார்.

சிந்து மாகாணத்தில் கோத்கி மாவட்டத்தில் மிர்பூர் மாத்தெலோ நகரில் லால் டாக்டராக பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 2013ம் ஆண்டு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) சார்பில் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

அப்பாஸி தனது அமைச்சரவையில், நவாஸ் ஷெரீப் ஆட்சியில் இருந்த அமைச்சர்களையும், சிலரை புதிதாகவும் நியமித்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை வலுவூட்ட அவர் முடிவு செய்துள்ளார். பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹூசைன் 46 அமை ச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் 28 பேர் தனி பொறுப்புடனும், 19 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட இஷாக் தார் மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். நவாஸ் ஷெரீப்பின் நெருங்கிய நண்பரான ஷரீப் இந்த முறை ராணுவம் மற்றும் தொழில் துறை அமைச்சக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளிநாடு விவகாரத் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தலை மனதில் வைத்து கடந்த முறை இருந்ததை விட அமைச்சரவை இரு மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது பெரிய அளவிலான அமைச்சரவை என்று குறிப்பிடப்படுகிறது.