கடவுளின் பத்து அவதாரங்களும்…. மனிதனின் வாழ்க்கையும் – முதல் பகுதி

 

எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ , அங்கெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன் என்றார் கடவுள் . சொல்லியபடி உலகைக்  காக்க அவர் எடுத்த அவதாரங்களை மனித வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்தால் , நம் இந்து மதத்தின் மகத்துவம் நம்மைப் பெருமை கொள்ள வைக்கும் .

 

மச்ச அவதாரம்:

தாயின் வயிற்றிலிருந்து  அவளின் உதிரத்தில் நீந்தி பிறப்பது…

இது திருமாலின் முதலாவது அவதாரம் ஆகும். மச்சம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு  மீன்  என்று அர்த்தம் .கிருத யுகத்தில்  படைப்பிற்கு ஆதாரமான வேதங்களைப் பிரம்மாவிடம் இருந்து, குதிரை முகம் கொண்ட சோமுகாசுரன் என்ற அசுரன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்துவிட ,உலகில் பிரளயம் ஏற்பட்டது. சோமுகாசுரனுடன் போரிட்டு வேதங்களை மீட்டு உலக உயிர்கள் படைப்புத் தொழிலை மீண்டும் பிரம்மனுக்கே வழங்கினார் மச்ச மூர்த்தி .

கூர்ம அவதாரம்:

குழந்தை மூன்றாம் மாதம் கவிழ்ந்து , பின் தலை தூக்கிப் பார்ப்பது…

கிருத யுகத்தில் நடைபெற்ற இது , திருமாலின் இரண்டாவது அவதாரமாகும். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள். அமிர்தத்தை எடுக்க  மந்திர மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக்  கடைய .அப்போது மலை அதன் பாரம் தாங்காது கடலில் வீழ்ந்தது. தேவர்களுக்கு உதவும் பொருட்டு ,திருமால் ஆமையாகக் கூர்ம அவதாரம்  எடுத்து மலையைத் தாங்கி கடலை கடைய துணைபுரிந்தார்.

 

வராக அவதாரம்:

ஆறாம் மாதம்  குழந்தை முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது…

 திருமாலின் மூன்றாவது அவதாரமான இது ,  கிருத யுகத்தில் நடைபெற்றது. வாரகம் என்பதற்குப் பன்றி என்று பொருள். இரண்யாட்சன்  என்ற அரக்கன் , பூமியை எடுத்துக் கொண்டு காலுக்கடியில் மறைத்து வைக்க , பிம்மாதிதேவர்களின்  வேண்டுகோளுக்கு மனம் இறங்கிய திருமால் , வெள்ளை நிறப் பன்றியாக வாரக அவதாரம் செய்தார். இரண்யாட்சனுக்கும் வாரக மூர்த்திக்கும் ஆயிரம் ஆண்டுகள்  நடந்த கடும் போரில் ,வாரக மூர்த்தி இரண்யாட்சனை வென்று  பூமியை தன் கொம்புகளில் தாங்கி வெளிக்கொணர்ந்து உலக உயிர்களைக் காத்தார்.

 

நாளை அடுத்த பகுதியில் சந்திப்போம்.