கடவுளின் பத்து அவதாரங்களும்…. மனிதனின் வாழ்க்கையும் பகுதி 2

எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ , அங்கெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன் என்றார் கடவுள் . சொல்லியபடி உலகைக்  காக்க அவர் எடுத்த அவதாரங்களை மனித வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்தால் , நம் இந்து மதத்தின் மகத்துவம் நம்மைப் பெருமை கொள்ள வைக்கும் .

நேற்று முதல் மூன்று அவதாரங்களைப் பற்றிப் பதிந்தோம்.  இன்று 2 ஆம் பகுதி

 

நரசிம்ம அவதாரம்:

எட்டாம் மாதம் உட்கார ஆரம்பிக்கும் குழந்தை தன்  கையில் கிடைத்ததை எல்லாம் கிழிப்பது…

இது திருமாலின் நான்காவது அவதாரமாகப் போற்றப்படுகிறது. இது கிருத யுகத்தில் நடைபெற்றது. நரன் என்றால் மனிதன்.  சிம்மம் என்றால் சிங்கம். நரசிம்ம மூர்த்தி சிங்கத்தலை மற்றும் கைகளில் சிங்க நகம் கொண்டு மனித உடலுடன் அருள்பாலிக்கிறார். இரண்யகசிபுவிடம் இருந்து தேவர்களை காப்பாற்றவும் , தன் பக்தன் பிரகலாதனுக்காகவும் தூணிலிருந்து திருமால் சிங்க முகம் மனித தலையுடன் நரசிம்மமாக வெளிப்பட்டார். இரண்யகசிபுவை வாயிற்படியில் வைத்து நகத்தால் வயிற்றைக் கிழித்துக் கொன்று உலக மக்களைத் துன்பத்திலிருந்து காப்பாற்றினார்.

வாமன அவதாரம்:

ஒரு வயதில் குழந்தை அடிமேல் அடி வைத்து நடப்பது…

திரேதா யுகத்தில் நடைபெற்ற இது ,   திருமாலின் ஐந்தாவது அவதாரமாக வைணவர்களால் போற்றப்படுகிறது. பலிச்சக்ரவர்த்தியால் மூவுலகையும் ஆளுவதற்காக செய்யப்பட்ட யாகத்தில் இறைவன் திரிவிக்கிரமனாக உருவம் கொண்டு வானத்தை ஓரடியாகவும், பூமியை ஓரடியாகவும் அளந்து மூன்றாவது அடியை பலிச்சக்ரவர்த்தியின் தலையில் வைத்து பாதாளலோகத்திற்கு அரசனாக்கினார்.

பரசுராம அவதாரம்:

வளர்ந்த பின் ஒரு மனிதன் , தாய் தந்தையருக்குக் கடமையாற்றுவது…

திரேதாயுகத்தில் நடைபெற்ற  திருமாலின் ஆறாவது அவதாரமான இதில் , சங்கு சக்ரதாரி , கையில் கோடாரியுடன் காட்சியளிக்கிறார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கூற்றிற்கு உதாரணமாக விளங்கிய பரசுராமர் . ஜமதக்னி மற்றும் ரேணுகாதேவியின் நான்கு புதல்வர்களில் ஒருவரான இவர் ,துரோணர், பீஷ்மர், கர்ணன் போன்ற மகாபாரதத்தில் உள்ள முக்கியமானவர்களின் குருவாகப் போற்றப்படுகிறார்.

நாளை மூன்றாம் மற்றும் இறுதி பகுதியை காண்போம்