ஆதார் சட்டம்: நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி பரிந்துரை மத்திய அமைச்சரிடம் சமர்ப்பிப்பு

டில்லி:

தார் குறித்த தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று  உச்சநீதி மன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமை யிலான விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆதார் தகவல்கள் திருடப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக தனிநபரின் பாதுகாப்பு கேள்விக்குறியதாகி வருவதாகவும் உச்சநீதி மன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து,  ஆதார் சட்டம் தொடர்பான திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு ஆதார் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை  மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் அறிக்கை வழங்கியுள்ளது.

அதில்,  குடிமக்களின் உரிமைகளை காக்கவும், அத்து மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் தண்டனைகள் வழங்கவும், பிரத்யேக அடையாள ஆணையத்தை தனி அதிகாரம் படைத்த அமைப்பாக மாற்றும்படி பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்தியஅமைச்சர், தற்போது ஆதார் தொடர்பான வழக்குகள்  உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது  எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும், விரைவில்  ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையின்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.